அடாது விலை உயர்ந்தாலும் விடாது தங்கத்தை வாங்குபவர்கள் இந்தியர்கள். கலாச்சார மரபையெல்லாம் தாண்டி தற்போது தங்கம் ஒரு முக்கிய முதலீடாகவே மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் சமீபத்திய ஆண்டுகளாக தங்கம் கொடுக்கும் ரிட்டன்ஸ். உதாரணத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் தங்க விலையில் ஏற்பட்ட வளர்ச்சியை மட்டும் ஒப்பிட்டுப் பாருங்கள். விடை உங்களுக்கே கிடைத்துவிடும்.
பொதுவாக தங்கம் வாங்கும் போது தங்கத்தின் விலைக்குக் கூடுதலாக செய்கூலி மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றை செலுத்தி தான் வாங்க வேண்டும். இந்தியாவில் தங்கத்தின் மீது ஜிஎஸ்டி எப்படி விதிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
தங்க நகைகளுக்கான ஜிஎஸ்டி எவ்வளவு?: தற்போது இந்தியாவில் 2 விதமாக ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. தங்கத்தின் மதிப்பு எவ்வளவோ அதில் 3 சதவீதம் ஜிஎஸ்டி, மற்றொன்று தங்க நகை செய்வதற்கான செலவில் 5 சதவீதம் ஜிஎஸ்டி. அதாவது மேக்கிங் சார்ஜஸ் என்று சொல்லப்படுகிற செய்கூலி மீது 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

2017-ஆம் ஆண்டு முதன்முதலாக ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜிஎஸ்டி கவுன்சில் வரி அடுக்குகளில் சில மாற்றங்களைச் செய்யும். 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிற பொருட்களின் ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றங்களைச் செய்த போதிலும், தங்கத்தில் மீதான 3 சதவீத வரியை மாற்றாமல் அப்படியே வைத்திருக்க முடிவு செய்தது.
இன்றைய நிலவரப்படி நீங்கள் 24 கேரட் அல்லது 18 கேரட் என எந்த கேரட்டில் நகை வாங்கினாலும் நீங்கள் வாங்கும் நகையின் மதிப்பில் 3 சதவீத ஜிஎஸ்டியை செலுத்த வேண்டும். சிலர் 22 கேரட் தங்கத்திற்கும், 24 கேரட் தங்கத்திற்கும் மட்டுமே ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆனால் ஜிஎஸ்டி கவுன்சிலின் விதி அப்படி இல்லை.
தங்கத்தின் மீது ஜிஎஸ்டி எப்படி கணக்கிடப்படுகிறது?: நீங்கள் தங்கம் வாங்கும்போது நகை கடைக்காரர்கள் ஜிஎஸ்டி-ஐ கணக்கிட இரண்டு முறையை பயன்படுத்துகின்றனர். இவை இரண்டுமே சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை தான்.
மெத்தடு 1: இதை Itemised Billing என்று கூறுவார்கள். அதாவது தனித் தனியான வரி. உதாரணமாக நீங்கள் ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். முன்பு பார்த்ததைப் போல் ரூ.1 லட்சம் மதிப்பில் 3 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். அதாவது 3,000 ரூபாய். நீங்கள் வாங்கிய நகையை செய்வதற்கு ரூ.10,000 செய்கூலி என்று வைத்துக்கொள்வோம். அதற்கு 5 சதவீத ஜிஎஸ்டி பொருந்தும். ரூ. 10,000 செய்கூலியில் 5% என்றால் 500 ரூபாய்.
ஆக மொத்த தங்கத்தின் மதிப்பான ரூ.1 லட்சம், கூடுதலாக செய்கூலி ரூ.10,000, அதற்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் செய்கூலிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி அனைத்தையும் சேர்த்து 1,13,500 ரூபாய் செலுத்த வேண்டும்.
மெத்தட் 2: இதை மொத்த வரி முறை என்று கூறுவார்கள். சில கடைகளில் இந்த முறையை பயன்படுத்தியும் பில் போடுவார்கள். தற்போது நீங்கள் வாங்கிய தங்கத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் மற்றும் செய்கூலி ரூ.10,000 என்று வைத்துக்கொள்வோம். இரண்டையும் சேர்த்தால் மொத்த பில் ரூ.1,10,000-ஆக இருக்கும். இதற்கு ஒட்டுமொத்தமாக 3 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். அப்படியானால் ரூ.3300 செலுத்த வேண்டும். ஆகையால் நீங்கள் கடைக்காரருக்கு 1,13,300 ரூபாயை செலுத்தி விட்டு உங்களின் நகையை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். நீங்கள் அதிகமாக நகை வாங்கும்போது அவற்றுக்கு ஏற்ப வரியில் சிறு மாற்றம் ஏற்படும். எனவே எப்போதும் Itemised Billing பில் என்று சொல்லப்படுகிற தனித்தனி வரியை கேட்பது வாடிக்கையாளர்களுக்கு வரி முறையைப் புரிந்து கொள்ள உதவும்.
வரி சேமிப்பது எப்படி?: நீங்கள் எதற்காக நகை வாங்குகிறீர்கள் அல்லது தங்கம் வாங்குகிறீர்கள் என்பதை பொறுத்து எளிதில் வரி சேமிக்கலாம். உதாரணமாக திருமணத்திற்காக சிலர் நகை வாங்குவார்கள். திருமணத்திற்கு வாங்க வேண்டும் என்றால் நகைகளாக தான் வாங்க வேண்டும். இதற்கு கண்டிப்பாக செய்கூலி இருக்கும். எனவே செய்கூலியில் விதிக்கப்படும் ஜிஎஸ்டி 5 சதவீதம் என்று முன்பே பார்த்தோம். ஒருவேளை நீங்கள் அதிக அளவில் நகை வாங்கும் பட்சத்தில் செய்கூலி மீதான வரி மட்டும் ரூ.5,000-த்திலிருந்து ரூ.10,000 வரை வரலாம்.
அதுவே முதலீட்டுக்காக கோல்ட் பார் அல்லது கோல்ட் நாணயங்கள் போன்றவற்றை வாங்கினால் நீங்கள் செய்கூலி செலுத்தத் தேவையில்லை. அதற்கு தங்கத்தின் மதிப்பில் 3 சதவீத ஜிஎஸ்டி மட்டும் செலுத்தினால் போதுமானது. பெரும்பாலான நகை கடைகளில் தங்க காயின்கள் மற்றும் தங்க பார்கள் வாங்கும் போது செய்கூலி விதிக்கப்படுவதில்லை. மாறாக டையிங் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி போன்றவை மட்டும்தான் விதிக்கப்படுகிறது.
தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி என்ன? என்பதை தெரிந்து கொண்டு நகை கடைக்கு சென்றால் பில் போடும் போது ஏற்படும் தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்கலாம். அடுத்த முறை நகை கடைக்குச் சென்றால் வெறும் டிசைனை மட்டும் பார்க்காமல், வரி எப்படி போடப்பட்டிருக்கிறது என்பதையும் கவனியுங்கள்!


Click it and Unblock the Notifications