அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மேக் ஷா என்பவர் தங்க கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) மற்றும் இந்தியாவின் முதன்மையான கடத்தல் தடுப்பு அமைப்பான வருவாய் புலனாய்வுத் இயக்குனரகம் (டிஆர்ஐ) அதிகாரிகள் இணைந்து கடந்த திங்கட்கிழமை மதியம் அகமதாபாத்தில் பால்டியின் மகாலட்சுமி பகுதியில் உள்ள பூட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினர். சோதனைக்கு சென்ற அதிகாரிகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தங்கம்,ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சோதனையில், 87.9 கிலோ தங்க கட்டிகள், 19.6 கிலோ தங்க நகைகள், கோடிக்கணக்கான மதிப்புள்ள 11 அதிக மதிப்பிலான ஆடம்பர கடிகாரங்கள் மற்றும் ரொக்கமாக ரூ.1.37 கோடி மீட்கப்பட்டன. சோதனையின் போது மீட்கப்பட்ட பணத்தை பார்த்ததும், நம்மால் எண்ண முடியாது பணம் எண்ணும் இயந்திரத்தை கொண்டு வருவது நல்லது என்ற எண்ணம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டதாகவும், அதனையடுத்து இயந்திரம் கொண்டு வரப்பட்டு பணம் எண்ணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தில் குறைந்தபட்சம் 57 கிலோ வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட கடத்தல் தங்கமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

மேலும் சோதனை நடந்த அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்தவரும், முக்கிய குற்றவாளியாக கருதப்படுவருமான மேக் ஷா இந்த சட்டவிரோத நடவடிக்கையின் மையமாக இருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர் முக்கிய குற்றவாளியான மேக் ஷாவின் தந்தை மகேந்திர ஷா தற்போது விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளார். மகேந்திர ஷா கருப்பு பணத்தை மாற்றிக் கொடுக்கும் குஜராத்தின் பெரிய தலைகளில் ஒருவர் என்பதும், 15 சதவீத கமிஷனுக்காக கணக்கில் வராத பணத்தை சட்டப்பூர்வ சொத்துக்களாக மாற்றி கொடுப்பவர் என்பதையும் அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இந்த இருவருடனும் தொடர்புடைய பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகள் போலி நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டிருக்கலாம் என்று ஏடிஎஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சோதனை தொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்) சுனில் ஜோஷி கூறுகையில், துணை காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிளாட் பூட்டப்பட்ட நிலையில், அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு முன்பு ஒரு உறவினரின் வீட்டிலிருந்து சாவியை அதிகாரிகள் மீட்டனர். அதே கட்டிடத்தின் நான்காவது மாடியில் வசிக்கும் மேக் ஷாவின் உறவினரிடம், மேக் ஷாவின் நடவடிக்கைகள் குறித்த அவருக்கு தெரிந்தது இப்போது விசாரிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications