அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு ஹெச்1பி விசாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் ஹெச்1பி விசாவை அதிகமாக பயன்படுத்தும் இந்திய ஐடி ஊழியர்களின் அமெரிக்க கனவு கொஞ்சம் கொஞ்சமாக பறி போன வண்ணம் இருக்கிறது. இதனால் ஐடி நிறுவனங்கள் ஹெச்1பி விசாவுக்கு விண்ணிப்பித்து ஊழியர்களை அமெரிக்கா அனுப்புவதை குறைத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஐபிஎம் நிறுவனம் தனது மிகப்பெரிய வணிக பிரிவான IBM கன்சல்டிங்கில் ஹெச்1பி விசா மற்றும் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்த முடிவு செய்துள்ளது. எனவே தற்போது ஹெச்1பி விசாவில் நிறுவனத்தில் வேலையில் இருக்கும் ஊழியர்கள் வேறொரு நாட்டிற்கு இடம்பெயர வேண்டும் அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது அமெரிக்க டெக் துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்களுக்கு எதிர்கால நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தும். ஐபிஎம் தனது கன்சல்டிங் வணிகத்தில் உள்ள பெரும்பாலான பதவிகளுக்கு விசா மற்றும் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்துவதால், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அமெரிக்காவிற்கு வெளியே இருந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் அல்லது 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கள் வேலையை விட வேண்டும் என வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.
ஹெச்1பி விசா வைத்திருப்பவர்கள் மற்றும் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு இது அதிர்ச்சியான ஒரு அறிவிப்பு. ஏனெனில் இந்தியா உள்பட பல வெளிநாட்டு வல்லுநர்கள் தங்கள் பணி விசா மற்றும் அமெரிக்க நிரந்தர வசிப்பிட விண்ணப்பங்களுக்காக நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பை தான் நம்பியுள்ளனர். ஆனால் அதுவே நிறுத்தப்படுவதால் நாட்டை விட்டு வெளியேறுவது தான் அவர்களுக்கு இருக்கும் வழி என சொல்லப்படுகிறது.
ஐபிஎம் தனது ஹெச்1பி விசா ஊழியர்களுக்கு இந்த முடிவினை எடுக்க வெறும் 4 வார கால அவகாசம் மட்டுமே வழங்கியுள்ளது. ஊழியர்கள் வேறு நாடுகளீல் சென்று ஐபிஎம் நிறுவனத்தில் வேலை செய்யலாம் அப்படி இல்லை நான் வேலையை விட்டு செல்கிறேன் என அறிவிக்கும் ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் நிதி இழப்பீடாக வழங்கப்படும், அவர்களின் கடைசி வேலை நாள் டிசம்பர் 31ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாறிவரும் வணிக தேவைகள் மற்றும் அமெரிக்க அரசின் ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவையே ஐபிஎம் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஐபிஎம் நிறுவனத்தின் அனைத்து வணிக பிரிவுகளிலும் விசா ஸ்பான்சர்ஷிப் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படவில்லை; இந்த முடிவு IBM கன்சல்டிங்கில் உள்ள பெரும்பாலான பதவிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
ஐபிஎம் நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்ற விரும்பும் ஊழியர்களுக்கு வேறொரு நாட்டிற்கு மாறுவது ஒரு வாய்ப்பாக உள்ளது. இந்த இடமாற்றங்களில் இந்தியா ஒரு முக்கிய இடமாக உருவெடுக்கக்கூடும். ஏனெனில் Rest of World என வெளியிட்ட பட்டியலில் IBM-இன் வேலைவாய்ப்பு தளத்தில் இந்தியாவில் 1125 பதவிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
எனவே அமெரிக்காவிற்கு வெளியே ஐபிஎம் நிறுவனத்தில் தங்கள் வேலையை தொடர விரும்பும் சில ஊழியர்களுக்கு இந்த காலிப்பணியிடங்கள் வாய்ப்புகளை வழங்கக்கூடும். இருப்பினும், எத்தனை பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வெளிநாட்டு பதவிகள் வழங்கப்படும் என்பதையோ, கிடைக்கும் வேலைகள் அவர்களின் தற்போதைய பதவிகள் மற்றும் ஊதியத்திற்கு சமமாக இருக்குமா என்பதையோ நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. அமெரிக்க வாழ்க்கை கனவில் ஹெச்1பி விசாவில் சென்ற ஏராளமான வெளிநாட்டவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

