இந்தியாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி வரும் நிலையில் இன்டீட் ஹையரிங் லேப் (Indeed Hiring Lab) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கை சில நம்பிக்கை தரும் தரவுகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக எந்த துறைகளில் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கைப்படி இந்தியாவின் முறைசார் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ந்து வலுவாக உள்ளன. அக்டோபர் மாதத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் 1.8% உயர்ந்துள்ளன, இது கடந்த ஆண்டை விட 19% அதிகமாகும். இருப்பினும், துறைவாரியான வளர்ச்சியில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் இருப்பது தெரிய வருகிறது. வங்கி, நிதி மற்றும் சுகாதார துறைகளில் வேலைவாய்ப்புகள் வேகமாக உயரும் நிலையில், மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன என இந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த 3 மாதங்களில் வேலைக்கு ஆட்களை எடுப்பதில் முதலிடத்தில் இருப்பது வங்கி மற்றும் நிதித் துறை தான், இங்கே வேலைவாய்ப்பு விகிதம் 52% அதிகரித்துள்ளது. அடுத்ததாக செவிலியர் பணியிடங்கள் 39% உயர்ந்துள்ளதாம். பல் மருத்துவ பணிகள் 36.9%, பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு சார்ந்த பணிகள் 28.4% உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர் சேவை வேலைகள், சுத்தம் மற்றும் சுகாதார பராமரிப்பு வேலைகள், அழகு கலை வேலைகள், மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் , உணவு தயாரிப்பு மற்றும் சேவை ஆகிய துறைகளில் 20%க்கும் அதிகமாக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
குறிப்பாக சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான தேவை கடந்த மூன்று மாதங்களில் 21% உயர்ந்துள்ளது. அதே வேளையில் தொழில்நுட்பத் துறை பணியமர்த்தலில் ஏற்பட்டுள்ள சரிவு ஒட்டுமொத்த வளர்ச்சியின் வேகத்தை ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளது. மென்பொருள் துறையில் வேலைகள் 12% சரிந்துள்ளது, லாஜிஸ்டிக்ஸ் சப்போர்ட், டேட்டா மற்றும் அனலிஸஸ், ஐடி அமைப்புகள் மற்றும் தீர்வுகள் , மீடியா வேலைகள் ஆகிய அனைத்துமே வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் சரிவை சந்தித்துள்ளன.
இன்டீட் தரவுகள் , இந்தியாவின் முறைசார் பொருளாதாரத்தில் உள்ள நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மட்டுமே கணக்கில் எடுத்துள்ளது. நாட்டில் உள்ள பெருமளவிலான முறைசாரா வேலைவாய்ப்புகளை இது கணக்கில் கொள்ளவில்லை என்பதால், இது ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சந்தையின் முழுமையான பிரதிபலிப்பாக இருக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா படிப்படியாக முறைசார் வேலைவாய்ப்பை நோக்கி நகர்ந்து வருவதால், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பை விட முறைசார் துறையில் வேலை உருவாக்கம் வேகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த ஊதியம், அதிக வேலை பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தான் ஊழியர்கள் முக்கியத்துவம் தருகின்றனர் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட வேலைவாய்ப்பு உருவாக்கம் 19% அதிகரித்திருந்தாலும், தகுந்த திறன் கொண்ட பணியாளர்களை கண்டறிவதில் நிறுவனங்களுக்கு தொடர்ந்து சவால்கள் உள்ளன, பல துறைகளிலும் திறன் பற்றாக்குறை நிலவுகிறது என இந்த அறிக்கை கூறுகிறது. தற்போது வேலை தேடி வரும் இளைஞர்கள் எந்த துறையில் வேலைவாய்ப்பு அதிகம் என்பதை அறிந்து அதற்கேற்ப தங்களை தயார்ப்படுத்த இந்த அறிக்கை உதவும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications

