ரிலையன்ஸ் மற்றும் டி மார்ட் போன்ற சங்கிலித் தொடர் சில்லரை விற்பனை நிறுவனங்கள் தங்களது அடுத்த கட்ட வளர்ச்சிக்காக புதிய பகுதிகளில் தங்களது புதிய கடைகள் திறக்கின்றனர். பொதுவாக சில்லரை விற்பனை நிறுவனங்கள் இந்த ஆண்டில் இவ்வளவு புதிய கடைகளை திறக்க வேண்டும் என்று இலக்கு வைத்து செயல்படும்.
ஆனால் கடந்த 2024ம் ஆண்டில் பல முன்னணி சில்லரை விற்பனை நிறுவனங்கள் தங்களது புதிய கடைகள் திறப்பு வேகத்தை குறைத்ததோடு, செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

2024ம் ஆண்டில் ரிலையன்ஸ் ரீடெய்ல், டிமார்ட் மற்றும் டாடாவின் டிரெண்ட் உள்ளிட்ட நாட்டின் முன்னணி 12 சங்கிலித் தொடர் சில்லரை விற்பனை நிறுவனங்களின் புதிய கடைகள் திறப்பு பெரிய சரிவை கண்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் இந்த சில்லரை நிறுவனங்கள் தினமும் சராசரியாக 3 புதிய கடைகளை மட்டுமே திறந்தனர். இது 2023ம் ஆண்டில் 10 கடைகளாக இருந்தது.
காலணி,ஆடை, நகை மற்றும் துரித உணவு போன்ற விருப்பமான பிரிவுகளில் தேவை மந்தமாக இருந்தால், இந்த சில்லரை விற்பனையாளர்கள் தங்களது செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். மேலும் விரிவாக்க நடவடிக்கைகளை மெதுவாக மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
ஆதித்யா பிர்லா ஃபேஷன் அண்ட் ரீடெய்ல்,டிமார்ட், ரிலையன்ஸ் ரீடெய்ல்,டிரெண்ட்,டைட்டன் மற்றும் மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட சில்லரை விற்பனை நிறுவனங்கள் கடந்த ஆண்டில் தங்கள் கடைகளின் எண்ணிக்கையை 3 சதவீதம் அதிகரித்து 34,839ஆக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பாட்டா இந்தியாவின் எம்டி குஞ்சன் ஷா கூறுகையில், நிகர சேர்க்கைகள் குறைவாகவே உள்ளன. அதற்காக நாங்கள் புதிய கடைகளை திறக்கவில்லை என்று அர்த்தமல்ல. நாங்கள் கடந்த 6 முதல் 9 மாதங்களாக நாங்கள் தீவிரமாக செய்து வருவது என்னவென்றால், லாபம் ஈட்டாத கடைகளை மூடிவிட்டோம். இந்த நிலை இன்னும் ஒரு காலாண்டுக்கு இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் மொத்த சேர்க்கைகள் தொடர்ந்து நடக்கும் என்று தெரிவித்தார்.
இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் கூறுகையில், ஆடைகள்,காலணிகள், அழகு மற்றும் துரித உணவு சேவை போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட சில்லரை விற்பனை பிரிவுகளின் விற்பனை வளர்ச்சி கடந்த ஆண்டில் நடுத்தர ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது.
இது 2022ல் 15 சதவீதமாக இருந்தது. இதன் விளைவாக பெரும்பாலான சில்லரை விற்பனையாளர்கள் பல லாபமற்ற கடைகளை மூடினர். நிறுவனங்களை லாபத்தை அதிகரிக்க முற்படுவதால் இந்த போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
Story Written: Subramanian


Click it and Unblock the Notifications