ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி மறைவுக்கு பிறகு அவரது வாரிசுகளான முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இறுதியில் ஒரு வழியாக அவரது தாயார் கோகிலா பென் தலையிட்டு சொத்துக்கள சரி சமமாக பங்கிட்டு பிரச்சினையை சுமூகமாக முடித்து வைத்தார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது வாரிசுகளுக்கும் இது போன்ற கசப்பான அனுபவம் ஏற்பட்டு விடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக இப்போதே நிறுவன பொறுப்புகளை தனது வாரிசுகளுக்கு பகிர்ந்து அளித்து விட்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தலைவராக அவரது மகள் ஈஷா அம்பானி அறிவிக்கப்பட்டார். இவரது கைக்கு வந்த பிறகு ரிலையன்ஸ் ரீடெய்ல் படுவேகமாக வளர்ச்சி காண தொடங்கியுள்ளது.
ஈஷா அம்பானியின் விரிவாக்க யுக்திகள் பலனால் ரிலையன் ரீடெய்லின் மதிப்பு ரூ.8.4 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மேலும், ரூ.18.18 லட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனங்களில் மிகச் சிறப்பாக செயல்படும் துணை நிறுவனமாக ரிலையன்ஸ் ரீடெய்ல் உருவெடுத்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவன விரிவாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஈஷா அம்பானி தற்போது அழகு சாதன பொருட்கள் விற்பனையிலும் களம் இறங்கியுள்ளார். புதிய அழகு சாதன பிராண்டான தீராவை அறிமுகம் செய்துள்ளார். இதில் பெரும்பாலான மக்களுக்கு தெரியாத விஷயம் ஒன்னு இருக்கு. அது, முகேஷ் அம்பானியின் நெருங்கிய உதவியாளரின் மகள் பக்தி மோடி இதன் இணை நிறுவனர் என்பதுதான்.
அழகு சாதன பொருட்கள் துறையில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் நைகா, டாடா கிளிக், மைந்த்ரா போன்ற நிறுவனங்களுக்கு மத்தியில் தீரா பிராண்ட் களம் இறங்கியுள்ளது. தீரா பிராண்ட் அறிமுகத்தின்போது, அதன் விளம்பரத்திற்காக கரீனா கபூர், கியாரா அத்வானி மற்றும் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் ஆகியோரை தனது பிராண்ட் தூதுவர்களாக நியமனம் செய்தது அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது.
ஈஷா அம்பானி ஹைதராபாத் மற்றும் சென்னையில் தீரா பிராண்ட் கடைகளை தொடங்கியுள்ளார். தற்போது டெல்லியில் தீராவின் புதிய ஸ்டோரை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய தலைநகரில் சாகேட்டில் உள்ள டி.எல்.எஃப். மாலின் தரை தளத்தில் யூனிக்லோ ஆங்கர் ஸ்டோருக்கு அடுத்தப்படியாக உள்ள இடத்தை தீரா வாடகைக்கு எடுத்துள்ளதாக தகவல்.
தற்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் அந்த இடத்தில் தீரா ஸ்டோருக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன் இந்த இடத்தில் ஆதித்ய பிர்லா பேஷன் பிராண்டான பார்எவர் 21 இருந்தது. பார்எவர் 21-ன் குத்தகை முடிந்ததா அல்லது அது வெளியேறுவதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தற்போது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications