நாம் செய்வது சாதாரண வேலையாக இருந்தாலும் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி இருந்தால் பெரிய அளவுக்கு உயரலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்.
கர்நாடகா மாநிலம், பந்த்வால் பகுதியில் உள்ள நாவூர் கிராமத்தை சேர்ந்தவர் 55 வயதான சேசப்பண்ணா. 3-ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றுள்ளார். கடந்த 1996-ஆம் ஆண்டு பந்த்வால் நகராட்சி மன்றத்தில் தூய்மை பணியாளராக தனது பணியை தொடங்கினார். அப்போது அவருக்கு தினக்கூலியாக 50 ரூபாய் கிடைத்தது.

தொடக்கத்தில் கடுமையான வறுமையில் வாடி வதங்கினார், மூன்று வேளை சாப்பாட்டிற்கே அவதிப்படும் சூழல் இருந்தது. இதனால் அவர் ஒரு கட்டத்தில் மதுப்பழக்கத்திற்கும் ஆளாகி வாழ்க்கையெ திசைமாறி போனது. திடீரென ஒரு நாள் அவரது தந்தை இறந்த நிலையில் அவரது இறுதி சடங்குகளை செய்வதற்குக்கூட அவரிடம் பணம் இல்லையாம். யாரும் பணம் தந்து உதவவும் முன் வரவில்லையாம். தானே தன் தந்தையின் உடலை சுமந்து சென்று இறுதி சடங்குகளை செய்துள்ளார். இது அவரது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
2005-ஆம் ஆண்டில் அப்போதைய காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய கே.யூ. பெல்லியப்பா வழங்கிய அறிவுரை ஏற்று சேசப்பண்ணா மதுப்பழக்கத்தை முழுமையாக விட்டொழித்தார்.நகராட்சியில் இணைந்து மீண்டும் வேலை செய்ய தொடங்கியுள்ளார். சாலைகளை சுத்தம் செய்வது மட்டுமின்றி, நகராட்சியின் குப்பை அகற்றும் வாகனங்களை ஓட்டுவது போன்ற பொறுப்புகளையும் எடுத்து கொண்டு அவற்றையும் சிறப்பாக செய்து வந்தார்.
காலையில் தூய்மை பணியாளராக வேலை செய்யும், சேசப்பண்ணா, மதிய வேளையில் பால் வியாபாரம் மற்றும் விவசாயம் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு மாதந்தோறும் கணிசமான வருமானம் ஈட்டி வருகிறார். இதன் மூலமே அவர் தனது பொருளாதார நிலையை உயர்த்தி கொண்டு சிறுக சிறுக பணம் சேர்த்து தொடக்கத்தில் ஒரு பழைய மாருதி 800 காரை வாங்கினார்.
அதில் இருந்து கார்கள் மீது ஆர்வம் பிறக்க, ஓம்னி, ஆல்டோ, ரிட்ஸ் , ஸ்கார்பியோ என பல்வேறு வாங்கி பயன்படுத்தியுள்ளார். அண்மையில் தன்னிடம் இருந்த கார்களை விற்றுவிட்டு செகண்ட் ஹேண்ட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை வாங்கியுள்ளார். தற்போது வேலைக்கு தினமும் ஃபார்ச்சூனர் காரில் வருகிறார். தினமும் காலையில் பந்த்வால் நீதிமன்றம் அருகே தனது ஃபார்ச்சூனர் காரை நிறுத்தி விட்டு கையில் துடைப்பத்துடன் தூய்மை பணியை தொடங்குகிறார்.
ஃபார்ச்சூனர் காரில் இருந்து வந்து அவர் வேலை செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. வேலை எதுவாக இருந்தாலும் அது தாழ்வானது அல்ல. தூய்மை பணி செய்வதன் மூலம் நான் அனைவருக்கும் நன்மை செய்யும் ஒரு சேவையை செய்கிறேன் என்பதில் பெருமையாக கருதுகிறேன் என பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications


