மும்பை: ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலுக்கும் முந்தைய 6 மாதங்களில் நிப்டி 13 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது என்று ஜே.பி. மோர்கன் தெரிவித்துள்ளது.
லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் பங்குச் சந்தைகளில் எப்போது லாபம் கிடைக்கும் என்பதை உறுதியாக தெரியாது.

உதாரணமாக, நீண்ட கால அடிப்படையில் நாம் முதலீடு செய்த பங்கின் விலை திடீரென குறுகிய காலத்தில் உயர்ந்து எதிர்பார்த்த லாபத்தை தரலாம் அல்லது பங்கின் விலை நீண்ட நாட்களுக்கு உயராமல் இருக்கவும் சாத்தியக் கூறுகள் உள்ளது. இருப்பினும், பங்குச் சந்தைகளின் வரலாற்றை ஆய்வு செய்தததில், நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பங்குச் சந்தைகள் பெரும்பாலும் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் அளித்துள்ளன என்ற தகவல் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலுக்கும் முந்தைய 6 மாதங்களில் பங்குச் சந்தை நல்ல ஆதாயம் கொடுத்துள்ளது. நிதி சேவை நிறுவனமான ஜே.பி. மோர்கன் சேஸ் அண்ட் கோ அறிக்கையின்படி, 1991 முதல் ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய 6 மாதங்களில் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி சராசரியாக 13 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. இருப்பினும், 1991 மற்றும் 1998 நாடாளுமன்ற தேர்தல்களின் போது மட்டும் நிப்டி இழப்பை சந்தித்தது.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நுகர்வு மற்றும் சந்தை உணர்வை அதிகரிக்க அரசு அதிக செலவினங்களை செய்யும். கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைகளை ஆதரிக்கும் மற்றும் பொதுமக்களின் உணர்வை உயர்த்தும் நோக்கில் கூடுதல் செலவுகள் போன்ற முயற்சிகளை அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்று ஜே.பி. மோர்கன் சேஸ் அண்ட் கோ தெரிவித்துள்ளது. இந்திய பங்குகள் குறித்த தனது நிலைப்பாட்டை "overweight" என ஜே.பி. மோர்கன் சேஸ் அண்ட் கோ மேம்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications