தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், கூலித் தொழிலாளி போன்ற பல்வேறு தரப்பு மக்களுக்கும் தங்களது ஓய்வுகாலம் குறித்த கவலை இருந்து கொண்டு இருக்கும். ஏனென்றால் அவர்களது ஓய்வு காலத்தில் பென்ஷன் போன்ற வருவாய் ஆதாரம் இல்லாமல் இருப்பது தான். அவர்களின் கவலையை போக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த ஒரு சிறப்பான திட்டம்தான் தேசிய ஓய்வூதிய திட்டம்.
2004ல் அரசு ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதிய திட்டம் (என்.பி.எஸ்.) தொடங்கப்பட்டது. இருப்பினும், 2009ல் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை மததிய அரசு மாற்றி அமைத்தது.

தனியார் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லதரசிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தற்போதைய விதிமுறைகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட அல்லது ஓய்வு பெற்ற சந்தாதாரர்கள், வருடாந்திரம் எடுப்பதையும், மொத்த தொகையை மாற்றுவதையும் 75 வயது வரை ஒத்திவைக்கலாம். மொத்த தொகையை ஒரே நேரத்தில் அல்லது வருடாந்திர அடிப்படையில் திரும்ப பெறும் வாய்ப்பு சந்தாதாரர்களுக்கு உள்ளது.
அதாவது வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே பணத்தை திரும்ப பெற முடியும். இந்நிலையில் தற்போது இந்த விதிமுறையில் ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மாற்றம் செய்துள்ளது.
ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தற்போது தனது ஓய்வூதியதாரர்களுக்கு, முறையான மொத்த தொகை திரும்ப பெறுதல் (SLW) வசதியை பரிந்துரை செய்துள்ளது. இதன்படி, தேசிய ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்கள் 75 வயது அடையும் வரை தங்கள் முழு ஓய்வூதிய நிதியில் 60 சதவீதம் வரை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் பெறலாம்.
60 வயதை எட்ட இருக்கும் அல்லது இந்த திட்டத்தில் இருந்து வெளியேற நினைக்கும் அனைத்து முதலீட்டாளர்களிடமும் SLW திட்டம் குறித்து என்.பி.எஸ். அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். மேலும், என்.பி.எஸ். முதலீடுகளுக்கான கே.ஒய்.சி. தொடர்பான நடைமுறைகளை ஆய்வு செய்யும் மத்திய ரெக்கார்ட் கீப்பிங் ஏஜென்சிகள் புதிய திட்டத்தை பற்றி தங்களது சந்தாதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications