பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இது டிவிடெண்ட் பெறும் காலம். பொதுவாக நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் லாபத்தை , தங்கள் நிறுவன பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு இவ்வளவு என பிரித்து வழங்குவர்.
இது ஆங்கிலத்தில் டிவிடெண்ட் என்றும் தமிழில் ஈவுத்தொகை என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் பல்வேறு நிறுவனங்களும் டிவிடெண்ட் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

மென்பொருள் நிறுவனம் ஒன்று ஒரு பங்குக்கு 240ரூபாய் என்ற அளவில் ஈவுத்தொகை அறிவிப்பு வெளியிட்டு முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆரக்கிள் ஃபைனான்சியல் சர்வீசஸ் சாப்ட்வேர் லிமிடெட் நிறுவனம் (Oracle financial services software limited), 2023 - 24 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால டிவிடெண்டை அறிவித்துள்ளது. இதன்படி 5 ரூபாய் பேஸ் வேல்யூ கொண்ட ஒவ்வொரு ஈக்விட்டி பங்குகளுக்கும் 240 ரூபாய் டிவிடெண்ட் ஆக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிவிடெண்டுகளை வழங்குவதற்கான ரெக்கார்ட் டேட் என்பது மே 7,2024 என ஆரக்கிள் ஃபைனான்சியல் சர்வீசஸ் சாப்ட்வேர் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் நடந்த நிறுவன வாரிய இயக்குநர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மே 23ஆம் தேதி இடைக்கால டிவிடெண்டுகளை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மே 7ஆம் தேதி அன்று தங்களது பங்குதாரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதலீட்டாளர்கள் அனைவருக்கும் டிவிடெண்ட் வழங்கப்படும் என ஆரக்கிள் ஃபைனான்சியல் சர்வீசஸ் சாப்ட்வேர் லிமிடெட் நிறுவனம் கூறியுள்ளது.
ஆரக்கிள் ஃபைனான்சியல் சர்வீசஸ் சாப்ட்வேர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 63,787 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் புக் வேல்யூ 749.49 ஆக உள்ளது. 2023 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் 5,890 கோடி ரூபாயாக உள்ளது.
இந்நிறுவனத்தின் நிகர லாபம் 2023 ஆம் ஆண்டில் 1,806 கோடியாக இருந்தது.நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 72% பங்குகள் ப்ரமோட்டர்களிடமே உள்ளன. சில்லறை முதலீட்டாளர்கள் 10.86 % பங்குகளும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் 6.13 % பங்குகளும் உள்ளன .
ஆரக்கிள் ஃபைனான்சியல் சர்வீசஸ் சாப்ட்வேர் லிமிடெட் நிறுவனம் கடந்த ஓராண்டு காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 109 % லாபத்தை பெற்று தந்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு ஏப்ரல் 25ஆம் தேதி பங்குச்சந்தியில் 7,170 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவன பங்குகளின் 52 வார கால உச்சம் என்பது 921.40 ரூபாயாகும்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த நிறுவனம் ஒரு ஈக்விட்டி பங்குகளுக்கு மொத்தமாக 2100 ரூபாய் வரை டிவிடெண்ட் வழங்கியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications