சென்னை: ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே மளிகை பொருட்களை வழங்க வேண்டும் என்றும் அவற்றை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை வழங்கப்படுகின்றன. அது தவிர சில மளிகை சாமான்களும் விற்பனை செய்யப்படுகின்றன. டீ தூள், உப்பு, உளுந்து, சோப்பு, வெந்தயம், சுண்டல் வகைகளும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ரேஷனுக்கு உட்பட்ட பொருட்கள் போக இவை தேவைப்பட்டால் மக்கள் வாங்கி கொள்ளலாம். தனியார் கடைகளுடன் ஒப்பிடும் போது ரேஷன் கடையில் இதன் விலை குறைவாக இருக்கும்.

இந்நிலையில் ரேஷன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ரேஷன் கடை ஊழியர்கள் இந்த மளிகை பொருட்களையும் கட்டாயம் வாங்க வேண்டும் என கூறுகிறார்கள். இது தொடர்பாக கூட்டுறவு துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன.
சில கடைகளில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு மளிகை தொகுப்புகள் விற்பனைக்காக அனுப்பப்பட்டனவாம். அவற்றில் விற்றது போக மீதமுள்ள பொருட்களை ரேஷன் கடை ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி விற்பனை செய்கிறார்களாம்.
தொடர்ந்து இது பற்றிய புகார் வந்ததை அடுத்து கூட்டுறவுத் துறை சார்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். அதன் படி விற்பனை செய்யப்பட்ட பொருட்களை தவிர்த்து கையிருப்பில் மீதமுள்ள பொருட்களை கட்டாயப்படுத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிறப்பு தொகுப்பில் விற்பனையாகாமல் இருக்கும் பொருட்களை திருப்பி அனுப்ப வேண்டும் என கூட்டுறவு துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைக்கு வரும் மக்களிடம் இந்த மளிகை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது என்றும் மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரேஷன் கடைகளில் நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 39 மாவட்டங்களில் மொத்தம் 2.25 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன, 34, 793 நியாயவிலை கடைகள் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இதனிடையே ரேஷன் அட்டைகளுக்கு கேஒய்சி செய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை தங்களின் ஆதார் விவரங்களை தந்து பதிவு செய்யாதவர்கள், தங்களின் ரேஷன் கடைக்கு சென்று கை ரேகை பதிவு செய்து கேஒய்சியை முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications