முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் FMCG பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் தனது முழு கவனத்தையும் தமிழ்நாட்டின் பக்கம் திருப்பியுள்ளது. இந்த நிறுவனம் தனது Independence பிராண்டின் கீழ் பல புதிய வகை பிஸ்கட்களை கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து புது புது பிஸ்கட்களின் விற்பனையை தொடங்கியுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் இதற்காக பிரபல நடிகர் அஜித் குமார் உடன் கைகோர்த்துள்ளது. தமிழ்நாட்டில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது இன்டிபென்டன்ஸ் பிராண்டின் கீழ் 9 புதிய பிஸ்கட் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக இந்த பிஸ்கட்டுகள் தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மற்ற சந்தைகளிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் Independence Power Up மற்றும் Independence Milky Power என இரண்டு பிரிவுகளாக பிஸ்கட்கள் சந்தைக்கு வருகின்றன. இதில் Independence Power Up பிரிவின் கீழ் வரும் பிஸ்கட்கள் பால், குளுக்கோஸ் மற்றும் புரோட்டீன் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது தினசரி நுகரப்படும் சாதாரண பிஸ்கட் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மற்றும் தனித்துவமான தயாரிப்பாக இருக்கும் என ரிலையன்ஸ் கூறுகிறது.
தமிழ்நாட்டில் புதிய வகை பிஸ்கட்களை மக்களிடம் சென்று சேர்க்க ரிலையன்ஸ் நிறுவனம், நடிகர் அஜித் குமாரின் "அஜித் குமார் ரேசிங் (Ajith Kumar Racing)" நிறுவனத்துடன் பிராண்ட் கூட்டுறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் நுகர்வோர் மத்தியில் எளிதாக தங்கள் பிஸ்கட்களை கொண்டு சேர்க்க முடியும் என ரிலையன்ஸ் நம்பிக்கை தெரிவிக்கிறது.
அனைத்து பிரிவு மக்களையும் சென்றடையும் வகையில் பல்வேறு விலை வரம்புகளில் இந்த பிஸ்கட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. டிரையல் பேக்குகள் 5 ரூபாய்க்கும் அதன் பின்னர் 10 ரூபாய், மற்றும் 40 முதல் 125 ரூபாய் வரை பெரிய பேக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
பாரம்பரிய சில்லறை வர்த்தகங்கள், இ-காமர்ஸ, ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் மூலம் இந்த பிஸ்கட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. தங்களின் பிஸ்கட் பிரிவுக்கு தமிழ்நாடு தான் பிரதான சந்தை என தெரிவிக்கும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் இயக்குநர் கிருஷ்ணகுமார், மிஸ்க் பிஸ்கட்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது எனவே அந்த பிரிவில் தாங்கள் அதிக கவனம் செலுத்த போகிறோம் என கூறியுள்ளார்.
அண்மையில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஐஸ்கிரீம் பிஸ்னஸை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கியது. அதே போல அஜித் குமாரின் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வன் எனர்ஜி பார்ட்னராக ரிலையன்ஸின் கேம்பா கோலா தான் செய்ல்படுகிறது. இதனால் ஏற்கனவே ரிலையன்ஸுக்கும் அஜித்குமாருக்கும் இடையே உள்ள ஒப்பந்தமும் இந்த புதிய ஒப்பந்தம் மூலம் இன்னமும் வலுப்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications

