கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் இப்போது அந்த விலை உயர்விலிருந்து சற்று குறைந்திருக்கிறது. இருந்தாலும் கடந்த காலத்தில் பிற முதலீட்டு திட்டங்களைக் காட்டிலும் தங்கம் சிறப்பான ரிட்டன்ஸை வழங்கியுள்ளது. 2026-ஆம் ஆண்டில் தங்கத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அடுத்த 10 ஆண்டுகளில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலின் தகவல்களின் அடிப்படையில் அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம் எவ்வளவு வருமானம் வழங்கும் என்பதை தோராயமாக தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கு கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் செயல்பாடு: எதிர்காலத்தில் விலை எவ்வளவு உயரும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை முதலில் பார்ப்போம். 2016-ஆம் ஆண்டில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 28,623 ரூபாயாக இருந்தது. தற்போது 2026-ஆம் ஆண்டில் அதே 10 கிராம் விலை 1,53,250 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் 18.6 சதவீத வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளது. தங்கவிலை 5.35 மடங்கு வரை அதிகரித்துள்ளது. வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலின் தகவல்படி 2025-ஆம் ஆண்டில் மட்டும் தங்கம் 60 சதவீதத்திற்கும் அதிகமான ரிட்டன்ஸை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது.
2036-ஆம் ஆண்டு ரூ.1 லட்சம் முதலீடு எவ்வளவு வருமானத்தை தரும்?: அடுத்த 10 ஆண்டுகளில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை யாராலும் சொல்லிவிட முடியாது. ஆனால் வேர்ல்ட் கோல்ட் கவுன்சில்-இன் கணிப்புகளின் அடிப்படையில் இன்று ரூ.1 லட்சம் தங்கத்தில் முதலீடு செய்தால் 2036-ம் ஆண்டில் அதன் மதிப்பு என்னவாக இருக்கும் என்பதை கணக்கிடுவோம்.
இன்று தங்கத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து அதற்கு வருடாந்திர வருமானமாக 5.2% கிடைத்தால்.. 2036-ஆம் ஆண்டில் அதே ரூ.1 லட்சம் தங்கத்தின் மதிப்பு ரூ.1.66 லட்சமாக அதிகரித்திருக்கும். ஒருவேளை தங்கம் அடுத்த 10 ஆண்டுகளில் 8% வருடாந்திர வருமானத்தை வழங்கினால் இன்று ரூ.1 லட்சத்திற்கு வாங்கும் தங்கம் 2036-ஆம் ஆண்டில் ரூ.2.16 லட்சமாக அதிகரித்திருக்கும்.
அதுவே 10 சதவீத வருடாந்திர வருமானத்தை வழங்கினால்.. இன்று ரூ.1 லட்சம் செய்யப்படும் முதலீடு 2036-இல் ரூ.2.60 லட்சமாக இருக்கும். 12 சதவீத வருடாந்திர வருமானம் கிடைத்தால் இன்றைய ரூ.1 லட்சம் முதலீடு 2036-ல் ரூ.3.10 லட்சமாக இருக்கும். அதுவே 18.6 சதவீத வருமானம் அப்படியே தொடர்ந்தால் இன்று ரூ.1 லட்சத்திற்கு செய்யப்படும் முதலீடு ரூ.5.50 லட்சமாக அதிகரித்திருக்கும்.
2025-ஆம் ஆண்டு தொடங்கி 2040-ஆம் ஆண்டு வரையில் தங்கம் 5.2% வருமானத்தை வழங்கும் என்று வேர்ல்ட் கோல்டு கவுன்சில் கணித்துள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது இன்றைய ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு ரூ.66,000 வரை நிகர லாபம் கிடைக்கும். அதுவே கடந்த கால பெர்ஃபார்மன்ஸ் அடிப்படையில் அடுத்த 10 ஆண்டுகளிலும் அதே வருமானம் கிடைத்தால் 2036-ஆம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு ரூ.5.50 லட்சம் வருமானம் கிடைக்கும். ஆனால் இது ஒரு கணிப்பு மட்டுமே. உண்மையான தங்கம் விலை அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகிதம், புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவற்றை பொறுத்து மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications
