சாம்சங் பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு ஸ்மார்ட் போன் நிறுவனம். இன்னமும் கூட நீடித்து உழைக்க கூடிய ஸ்மார்ட் போன் என்றால் பலரும் சாம்சங் பிராண்டிற்கு தான் செல்வார்கள். விரைவில் சாம்சங் நிறுவனம் ரோபோ பிஸ்னஸில் இறங்க இருக்கிறது.
உலக அளவில் ஹியூமனாய்டு ரோபோ எனப்படும் மனித வடிவ ரோபோக்கள் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிப் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணியில் உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தனது முதல் மனிதவடிவ ரோபோவை ஜனவரி மாதம் பொதுமக்கள் பார்வைக்கு அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஜனவரி மாதம் நடைபெறும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோ கண்காட்சியில், சாம்சங் தனது முதல் மனிதவடிவ ரோபோ மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. முன்னதாக, சாம்சங் தனது நிறுவன வாரிய உறுப்பினர்கள் முன்பு ரோபோவை காட்சிப்படுத்தி விளக்கம் தந்துள்ளது.
தொழிற்சாலைகளில் பணிகளை செய்ய ஏதுவாக மனிதவடிவ ரோபோக்கள் பொருட்களை சரியாக பிடிக்கவும், திருப்பவும், இடமாற்றம் செய்யவும் வேண்டும். எனவே, கைகள் மூலம் பொருட்களை கையாளும் திறன் கொண்ட ரோபோ வடிவமைப்பில் சாம்சங் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம், சாம்சங்கின் ஆர்.எக்ஸ் பிரிவின் ரோபோடிக்ஸ் ஆய்வக தலைவர் கிரிஸ் ஹவுசர் மனித வடிவ ரோபோ உருவாக்கம், மிகவும் கடுமையான போட்டி நிறைந்த ஒரு துறை என்றும் இதில் பல சவால்கள் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
2030-ஆம் ஆண்டிற்குள் தனது உற்பத்தி ஆலைகளில் மனிதவடிவ ரோபோக்களை பயன்படுத்த சாம்சங் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் பின்னர் வீட்டு வேலைகளை செய்வது மற்றும் முதியவர்களுக்கு உதவுவது போன்ற நுகர்வோர் சார்ந்த ரோபோ வடிவமைப்பில் கவனம் செலுத்தும் என கிரிஸ் ஹவுசர் கூறியுள்ளார்.
சாம்சங் நிறுவனம் ரோபோடிக்ஸ் துறையில் வளர்ச்சி மற்றும் வணிகமயமாக்கலை வேகப்படுத்த வசதியாக 2024-ஆம் ஆண்டில் தென் கொரியாவின் ரோபோடிக்ஸ் நிறுவனமான ரெயின்போ ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் மிகப்பெரிய பங்கினை கைப்பறியது. தற்போது வெற்றிகரமாக ரோபோவை உருவாக்கி இருக்கிறது.
ஏற்கனவே மனிதவடிவ ரோபோ சந்தையில் பல முக்கிய நிறுவனங்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. எலான் மஸ்கின் டெஸ்லா , சீனாவின் யூனிட்ரீ , ஹூண்டாய் மோட்டாரின் பாஸ்டன் டைனமிக்ஸ் ஆகியவற்றின் வரிசையில் இணைவதன் மூலம், தனது பாரம்பரிய தொழில்களுக்கு அப்பால் புதிய வளர்ச்சி தளங்களை உருவாக்கும் முயற்சியில் சாம்சங் வேகமாக காலடி எடுத்து வைத்துள்ளது.
ரோபோ பிஸ்னஸில் கவனம் செலுத்துவதால் ஸ்மார்ட்போன் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளுக்கு முக்கியத்துவம் இருக்காது என அர்த்தமள்ள என கூறியுள்ள நிறுவன அதிகாரிகள் சாம்சங் தொடர்ந்து தனது பாரம்பரிய ஸ்மார்ட் போன் , எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளுக்கும் சமமான முக்கியத்துவம் தரும் என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications

