இந்தியர்கள் அவசர தேவைக்கு உடனடியாக நாடுவது தங்க நகை கடன்களை தான். இப்படி தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெரிய தவறினை செய்கிறார்கள் என CRIF (CRIF Credit Information Services) அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி தங்க கடன் வாங்குபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடன் பெற்ற ஆறு மாதங்களுக்குள்ளேயே மற்றொரு தங்க கடனை பெறுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தங்கத்தை அடமானமாக வைத்து பெறும் கடன்கள் அவசர பணத் தேவைக்கு விரைவான தீர்வை தந்தாலும், முறையாக திருப்பி செலுத்தாமல் மீண்டும் மீண்டும் கடன் வாங்குவது நிதி அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.

CRIF வெளியிட்டுள்ள சமீபத்திய தங்க கடன்கள் அறிக்கை இந்தியாவில் தங்க கடன் வாங்கியவர்களில் 55% பேர், முதல் கடன் பெற்ற ஆறு மாதங்களுக்குள் மற்றொரு தங்க கடனை பெறுகின்றனர் என கூறியுள்ளது. கூடுதலாக, 9.4% பேர் தனிநபர் கடன்களையும் , மற்றொரு 9.4% பேர் நுகர்வோர் பொருட்களுக்கான கடன்களையும் பெறுகின்றனர் என சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் நிலுவையில் உள்ள தங்க கடன் மதிப்பு செப்டம்பர் மாத நிலவரப்படி கடந்த ஆண்டை விட 60.6% உயர்ந்து 23.3 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது என கூறியுள்ளது. இது கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்த 10.7 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்கிறது.
மருத்துவ அவசர தேவை, கல்வி செலவுகள், விவசாய தேவைகள் மற்றும் வணிக தேவைகளுக்கு பணத்தை பெற பலரும் தங்க நகை கடன்களை பயன்படுத்துகின்றனர், ஆனால் மீண்டும் மீண்டும் கடன் வாங்குவது நாட்டின் நிதி நிலைமைக்கு குடும்ப பொருளாதார சூழல்களுக்கும் உகந்தது அல்ல என கூறுகிறது. அதாவது இந்த கடன்கள் Cycle of Indebtedness எனப்படும் ஒரு கடனை அடைக்க மற்ற கடன், அதனை அடைக்க மற்றொரு கடன் என ஒரு சுழற்சியை உருவாக்கும் என எச்சரிக்கிறது.
மக்கள் தங்க கடன் பொறியில் சிக்காமல் இருக்க அடிக்கடி தங்க கடன்களை தொடர்ந்து புதுப்பிப்பது, பல நிறுவனங்களிடம் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவது, நிலுவையில் உள்ள வட்டியை செலுத்துவதற்காக புதிய கடனை பயன்படுத்துவது ஆகியவற்றை தவிரிக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தங்க கடன் தவணைகளை தவறவிடுவது, கூடுதல் வட்டி செலவுகள், அபராத கட்டணங்கள் மற்றும் கிரெடிட் ஸ்கோர் சரிவுக்கு வழிவகுக்கும். மேலும் உங்களின் நகை ஏலத்திற்கு செல்லவும் வழி வகை செய்யலாம் என கூறும் நிபுணர்கள் தங்க நகை கடன்களை அவசர பண தேவைக்காக பயன்படுத்த வேண்டுமே தவிர அதனையே வாடிக்கையாக கொள்வது சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

