இந்திய மிடில் கிளாஸ் மக்கள் ஏற்கனவே அரிசி, சர்க்கரை , பால் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த அடியாக துணி துவைக்கும் சோப்பு, பவுடர்கள் விலை உயர்வு வந்துள்ளது.
பிரபலமான FMCG நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட், துணி துவைக்கும் சோப்பு, பவுடர்கள் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் தங்களது லாப வரம்பை பாதுகாத்து கொள்ளவும் வீடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளது.

எனவே பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சர்ப் எக்செல் (Surf Excel), ரின் (Rin) மற்றும் வீல் (Wheel) போன்ற துணி துவைக்கும் பவுடர்கள், சோப்புகளின் விலைகள் 11% வரை உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு சாதாரண மக்களின் மாதாந்திர குடும்ப செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். பொருட்களின் பாக்கெட் அளவை பொறுத்து (Pack sizes) விலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பாக்கெட்டுகளின் விலை 1 முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
சர்ப் எக்செல் குவிக் வாஷ் (Surf Excel Quick Wash) 1 கிலோ பாக்கெட் விலை 235-ல் இருந்து 245 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் 500 கிராம் பாக்கெட் விலை 123-ல் இருந்து 128 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சர்ப் எக்செல் சோப்பு (250 கிராம்) விலை 3 ரூபாய் அதிகரித்து 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.4 சோப்புகள் கொண்ட சர்ப் எக்செல் பார் பன்டில் (ஒவ்வொன்றும் 200 கிராம்) விலை 145-ல் இருந்து 155 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வேலை.. வேலைனு இருந்தேன்.. 40 வயசிலேயே இப்படி ஆகிட்டேன்: ஏர்டெல் முன்னாள் தலைவர் ராம்ஜி வல்லத்'
ரின் ஆலா (Rin Ala - 500 மில்லி) விலை 95 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரின் டிடர்ஜெண்ட் பவுடர் 1 கிலோ பாக்கெட் விலை 3 ரூபாய் அதிகரித்து 123 ரூபாயாகவும், 500 கிராம் பாக்கெட் விலை 63 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீல் டிடர்ஜெண்ட் பவுடர் 1 கிலோ பாக்கெட் விலை 90 ரூபாயில் இருந்து 93 ரூபாயாகவும் , 500 கிராம் பாக்கெட் விலை 46 ரூபாயில் இருந்து 47 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரியா நாயர், தேவை வலுவாக இருந்தாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் தொடர்ந்து சவாலாகவே இருப்பதாக கடந்த மாதமே தெரிவித்திருந்தார். எனவே, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மற்றும் கச்சா பொருட்களின் விலையேற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு பொருட்களின் விலைகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.


Click it and Unblock the Notifications
