ரிசர்வ் வங்கியின் முடிவால் டாடா சன்ஸ் நிறுவனம் பங்குச்சந்தைக்கு வர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ள நிலையில் இந்நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் டாடா குழும நிறுவனங்கள் இன்று அதிரடியாக உயரும் என தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் கணித்திருந்த நிலையில், செல்லி வைத்தார் போல் நடந்துள்ளது.
அதிலும் முக்கியமாக 2.53 சதவீதம் அளவிலான டாடா சன்ஸ் பங்குகளை வைத்திருக்கும் டாடா கெமிக்கல் பங்குகள் இன்று அதிரடியாக 20 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்கியூட் அளவீட்டை தொட்டு உள்ளது. அடுத்தாக டாடா இன்வெஸ்ட்மென்ட் 13 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் பிஎஸ்ஈ 500 குறியீட்டில் இன்று அதிகம் வளர்ச்சி அடைந்த டாப் நிறுவனங்களில் இவ்விரு நிறுவனங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டாடா கெமிக்கல்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா ஸ்டீல், டாடா இன்வெஸ்ட்மென்ட், இந்தியன் ஹோட்டல்ஸ், டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் என மொத்தம் 7 டாடா குழும நிறுவனங்கள் டாடா சன்ஸ் பங்குகளை வைத்திருக்கிறது. இந்த 7 டாடா நிறுவனங்களிடம் சுமார் 11.92 சதவீத டாடா சன்ஸ் பங்குகள் உள்ளது.
ஆர்பிஐ விதிகளின் படி அப்பர் லேயர் நிதி நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும், இதன் படி டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்படி பட்டியலிடப்பட்டால் 15 - 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான டாடா சன்ஸ் நிறுவனம் டிஸ்கவுன்ட்-க்கு பின்பு சுமார் 9-12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பட்டியலிடப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் டாடா சன்ஸ்-ன் ஐபிஓ இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஐபிஓ மூலம் டாடா சன்ஸ் பங்குகளை வைத்திருக்கும் அனைத்து நிறுவனங்களின் மதிப்பும் உயரும் காரணத்தால் பங்குச்சந்தையில் இந்த 7 டாடா குழும நிறுவன பங்குகளின் விலை உயர்கிறது.
டாடா கெமிக்கல்ஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தை தாண்டி டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா ஸ்டீல் ஆகியவையும் இன்று 5 சதவீதம் வரையிலான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. மற்ற நிறுவனங்களை காட்டிலும் டாடா கெமிக்கல்ஸ் பங்குகள் அதிரடியாக உயர முக்கியமான காரணம் அதன் குறைவான சந்தை மதிப்பு.
டாடா கெமிக்கல்-ன் மொத்த சந்தை மதிப்பு 15,603 கோடி ரூபாயாக இருக்கும் வேளையில், இந்நிறுவனம் வைத்திருக்கும் டாடா சன்ஸ்-ன் 2.5 சதவீத பங்குகளுக்கு 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கணக்கிட்டால் 17,407 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் டாடா கெமிக்கல்ஸ் சந்தை மதிப்பு இரட்டிப்பாகும் வாய்ப்பு உள்ளது.
டாடா ஸ்டீல் மற்றும் டாடா மோட்டார்ஸ் (TMPV) நிறுவனம் 3.06 சதவீத பங்குகளை வைத்திருந்தாலும் அதன் சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தாலும், கடன் சுமை அதிகமாக இருக்கும் காரணத்தாலும் டாடா சன்ஸ் ஐபிஓ மூலம் கிடைக்கும் லாபம் குறைவாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications


