மும்பை: மும்பையில் டாரஸ் ஜுவல்லரி என்ற பெயரில் ஆறு இடங்களில் நகை கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த நகை கடையில் வாடிக்கையாளர்களுக்கு முதலீடு தொடர்பான திட்டங்களை வழங்கியுள்ளனர். இதனை நம்பி 1.25 லட்சம் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்து தற்போது தங்களுடைய பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
பிளாட்டினம் ஹாரன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் டாரஸ் ஜுவல்லரி என்ற பெயரில் மும்பையில் நகைக்கடைகள் செயல்பட்டுள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த கடையில் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டன.

இங்கே குறிப்பிட்ட தங்க சீட்டு போடுபவர்களுக்கு 48% கூடுதலாக லாபம் கிடைக்கும் என்றும், வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு 96 சதவீதம் கூடுதலாக லாபம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதேபோல நகைகளில் பதியப்படும் கற்களின் முதலீடு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 520 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என்றும் பல்வேறு திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதனை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு கார், போன் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கியுள்ளனர். மேலும் தங்களிடம் நகை சீட்டு போட்டு மற்றவர்களை பரிந்துரை செய்து அவர்களும் இணைந்தால் கூடுதல் பரிசு என்பன உள்ளிட்ட ஆசை வார்த்தைகளை கூறி 1.25 லட்சம் பேரை தங்கள் திட்டங்களில் முதலீடு செய்ய வைத்திருக்கின்றனர். சந்தேகம் ஏற்படாத வகையில் முதல் சில மாதங்களில் அவர்கள் வாக்குறுதி அளித்தபடி முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு கணிசமான தொகையை திரும்ப வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் டிசம்பர் 30ஆம் தேதி அன்று மும்பையில் இயங்கி வந்த ஆறு டாரஸ் நகை கடைகளும் திடீரென மூடப்பட்டு விட்டன. அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த யாரையும் செல்போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒரு போலியான நிறுவனம் என்றும் தங்கள் கடைகளில் கூட போலியான நகைகளை வைத்து வாடிக்கையாளர்களை ஏமாற்றியதும் தெரிய வந்திருக்கிறது.
இந்த நிறுவனம் சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதன் உரிமையாளர் நாட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனிடையே ஏமாந்து போன வாடிக்கையாளர்கள் தங்களுடைய முதலீட்டு தொகையையாவது திரும்ப பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Story Written By: Devika


Click it and Unblock the Notifications