சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் தான் இந்தியாவில் அன்றாடம் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை என்பது உச்சத்திலேயே இருக்கிறது.
குறிப்பாக ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கத்தின் விலை ஏற்றத்துடனேயே காணப்படுகிறது. MCXஇல் தங்கத்தின் விலை 73,958 ரூபாயை தொட்டது.

தங்கத்தின் விலை உயர்வுக்கு சர்வதேச காரணிகள் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உக்ரைனில் நடைபெற்று வரும் மோதல்கள் ஆகியவை காரணமாக கூறப்பட்டன. இதனால் சர்வதேச அளவில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவுவதாகவும் இதன் காரணமாகவே தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் TINA காரணிதான் தங்கத்தின் விலையை உயர்த்துகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
TINA – There is no alternative, அதாவது இதற்கு மாற்றாக வேறு ஒன்றும் இல்லை என்ற ஒரு கருத்து தான் தங்கத்தின் விலை இப்படி உச்சத்தை தொடுவதற்கு காரணமாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த TINA காரணி என்பது பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் சீனாவில் இந்த காரணி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டு சீனர்கள் 630 டன் தங்கத்தை வாங்கி வைத்துள்ளனர். அதுவே இந்தியர்கள் 562.3 டன் தங்கத்தை வாங்கியுள்ளனர்.
எதிர்காலத்தில் ஒரு நிச்சயமற்ற நிலை ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே குறிப்பாக முதலீட்டாளர்களிடையே ஏற்படும்போது அவர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி தான் செல்வார்கள். அந்த வகையில் உலகம் முழுவதுமே பாதுகாப்பான முதலீடாக எப்போதும் இருந்து வருவது தங்கம் தான்.
எனவே சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு என்பது அதிகரிக்கிறது. சீனாவில் இருக்கக்கூடிய சில்லறை விற்பனை கடைக்காரர்கள் , முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் மத்திய வங்கிகள் கூட அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. இவ்வாறு டிமாண்ட் அதிகரித்திருப்பதால் தான் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சீனாவில் முதன்முறையாக இதுபோல தங்கத்திற்கான டிமாண்ட் என்பது அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது . குறிப்பாக தங்க நகைகள், பார்கள், நாணயங்கள் வாங்குவதற்கு பெரிய அளவில் டிமாண்ட் இருப்பதாக தெரிகிறது.தலைநகர் பெய்ஜிங்கில் தங்க நகைகளுக்கான தேவை 10% வரை அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் அதற்கு நேர் மாறாக 6% வரை குறைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் பார்கள் மற்றும் நாணயங்களில் முதலீடு செய்யும் போக்கு 28% வரை அதிகரித்துள்ளது. TINA காரணி சீனாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்து இருப்பதால் வரும் காலத்தில் தங்கத்தின் தேவையும் தங்கத்தின் விலையும் அதிகரிக்கும் என ஹாங்காங்கை சேர்ந்த ப்ரீசியஸ் மெட்டல்ஸ் இன்சைட் லிமிடெடின் மேலாண் இயக்குனர் கிலாப்விஜ் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக சீனாவின் ரியல் எஸ்டேட் துறை மந்தமாகி வருகிறது, பங்குச்சந்தையும் நிலையற்று இருக்கிறது இதனால் தங்கத்துக்கு மாற்று வேறு எதுவும் இல்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications