இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் இந்திய வங்கிகளில் கடந்த சில வருடமாகத் தொடர் மோசடிகள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. இதிலும் குறிப்பாக விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்சி ஆகியோர் மறக்க முடியாத செய்தியாக அமைந்துள்ளது.
இந்தப் பெரும் மோசடிகளுக்குப் பின்பு இந்திய வங்கிகளில் மோசடி குறையும் என்று பார்த்தால் சற்றும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
அதிகரிக்கும் மோடிகள்
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்களின் படி 2017-18ஆம் நிதியாண்டில் 41,167 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது ஆர்பிஐ வெளியிட்டுள்ள தகவலின் படி 2018-19ஆம் நிதியாண்டில் சுமார் 71,543 கோடி ரூபாய் அளவிலான மோசடிகள் பதிவாகியுள்ளது.
இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் கிட்டதட்ட 74 சதவீதம் அதிகமாகும்.
வழக்குகளின் எண்ணிக்கை
2017-18ஆம் ஆண்டில் 5,916 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2018-19ஆம் நிதியாண்டில் 6,801 வழக்குகள் பதிவாகியுள்ளது. வழக்குகளின் எண்ணிக்கையும் சரி, மோசடி செய்யப்பட்ட தொகையின் அளவும் அதிகமாக இருக்கிறது.
பொதுத்துறை வங்கிகள்
2018-19ஆம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்டு உள்ள 6,801 வழக்குகள், 71,543 கோடி ரூபாய் அளவிலான மோசடிகளில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு மிகவும் அதிகமாக உள்ளது. மொத்தம் வழக்கில் 55.4 சதவீத வழக்குகளும், மோசடி செய்யப்பட்ட தொகையில் 90.2 சதவீத தொகை பொதுத்துறை வங்கியைச் சார்ந்து உள்ளது.
இவை அனைத்திற்கும் காரணம் சரியான கடன் விண்ணப்பத்தை ஆய்வு செய்யாதது, வங்கி ஊழியர்களின் மெத்தனம், பிரச்சனையைச் சரி செய்யும் அளவிற்கு அமைப்பு இல்லாமல் இருப்பதும் தான் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பிற வங்கிகள்
மொத்த வழக்கில் தனியார் வங்கிகள் 30.7 சதவீதமும், வெளிநாட்டு வங்கிகள் 11.2 சதவீதமும் பங்களிக்கிறது. இதேபோல் மோசடி செய்யப்பட்ட மொத்த தொகையில் தனியார் வங்கிகள் 7.7 சதவீதமும், வெளிநாட்டு வங்கிகள் 1.3 சதவீதமும் பங்கு வகிக்கிறது.


Click it and Unblock the Notifications