ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்க அமெரிக்க அதிபர் டிரம்புக்கு 100% அதிகாரம் வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நிலையில் அது அதிபரின் கையெழுத்தை பெற்று சட்டமாகவும் நடைமுறைக்கு வந்துள்ளது.
உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு வரும் வருவாயை தடுக்க வேண்டும், எனவே ரஷ்யாவின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ள கச்சா எண்ணெய் விற்பனைக்கு முட்டுக்கட்டை போட வேண்டும். இதற்காகவே அமெரிக்க அரசு The Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026 என்ற சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் பெரும் ஆதரவுடன் நிறைவேறிய இந்த மசோதா, தற்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டதன் மூலம் அதிகாரப்பூர்வ சட்டமாகியுள்ளது. இதன்படி ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை வாங்கும் நாடுகளுக்கு எதிராக 100% வரை வரி விதிக்க இந்த சட்டம் அமெரிக்க அதிபருக்கு முழு அதிகாரத்தை அளிக்கிறது.
அதாவது இந்த சட்டத்தின் படி டிரம்ப் நினைத்தால் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளின் மீது 100% வரியை விதிக்கலாம். ஒரு கையெழுத்து போட்டாலே போதும். உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முன்னணியில் உள்ளன. எனவே, இந்த சட்டம் இந்தியா மற்றும் சீனா மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த சட்டம் உடனடியாக இந்தியா மீது 100% வரியை விதிக்கவில்லை. மாறாக, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில், அதிபர் விரும்பினால் இந்த வரியை விதிக்கலாம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்தியா மீது 100% வரியை விதிக்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் டிரம்பிடமே உண்டு.
கடந்த ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்தது. இதனால் ஆடை, உணவு பொருட்கள், தோல் பொருட்கள் ஏற்றுமதி துறையில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் கரூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வருவாயையும் ஆர்டர்களையும் இழந்தனர். அதன் பின்னர் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரி குறைக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் டிரம்ப் இந்தியா மீது 100% வரி விதித்தால் ஏற்றுமதியாளர்கள் இன்னும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே ஈரான் போரால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டுள்ளது. இத்தகைய சூழலில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது வரி விதிக்க தற்போதைய சூழலில் அமெரிக்கா தடாலடியாக முடிவெடுக்காது என்றே சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications


