வாட்ஸ் அப் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு உரிய தகவல் பரிமாற்ற செயலியாக திகழ்கிறது. தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பும் செயலியாக மட்டுமில்லாமல் தொழில் ரீதியாகவும் அலுவல் ரீதியாகவும் வாட்ஸ் அப் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா அவ்வப்போது புது புது வசதிகளை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஜிமெயிலில் இருப்பது போன்ற ஒரு வசதியை வாட்ஸ் அப் கொண்டு வர இருக்கிறது. ஜிமெயில் நாம் நமது மெயில்களை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பும் (Scheduled) வசதி இருக்கிறது. அந்த வசதி வாட்ஸ் அப்பிலும் வர இருக்கிறது.

எனவே நாம் வாட்ஸ் அப்பில் இனி அனுப்ப வேண்டிய மெசேஜை முன்கூட்டியே டைப் செய்து வைத்து அதற்கான தேதி மற்றும் நேரத்தை Schedule செய்து விட்டால், குறிப்பிட்ட நேரத்தில் அது தானாகவே சம்பந்தப்பட்ட நபருக்கு சென்று சேரும். இந்த புதிய வசதி தனிநபர் சாட்கள் மற்றும் குரூப் சாட்கள் ஆகிய இரண்டிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகளை அடிக்கடி மறப்பவர்கள், வெவ்வேறு நேர மண்டலங்களில் வசிக்கும் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் தொடர்பு கொள்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வாட்ஸ் அப் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒருவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக இனி நள்ளிரவு 12 மணி வரை கண்விழித்திருக்க வேண்டிய அவசியமில்லை. முன்கூட்டியே வாழ்த்தை டைப் செய்து நள்ளிரவு நேரத்தை தேர்வு செய்துவிட்டால், மீதியை வாட்ஸ்அப் பார்த்துக்கொள்ளும். இந்த வசதி அடுத்த சில வாரங்களில் உலகளவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 14 நாட்கள் வரை முன்கூட்டியே மெசேஜ்களை Schedule செய்யலாம். டெக்ஸ் மெசேஜ், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் குறிப்பிட்ட நேரத்திற்கு Schedule செய்ய முடியும். பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண நாள் வாழ்த்துகள், பணி சார்ந்த நினைவூட்டல்கள், முக்கிய அறிவிப்புகள் போன்ற அன்றாட தேவைகளுக்கு இது கைகொடுக்கும்.
ஒருமுறை Schedule செய்யப்பட்ட பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் வாட்ஸ்அப் தானாகவே மெசேஜை அனுப்பிவிடும். பெறுநருக்கு இது ' Scheduled message' போல இல்லாமல், வழக்கமான மெசேஜாகவே காட்டும். இந்த அப்டேட்டின் மிக முக்கியமான மற்றும் பயனுள்ள அம்சமே Scheduled message அனுப்புபவரின் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தால் கூட தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் அந்த மெசேஜ் பெறுநரை சென்றடையும்.
இந்த புதிய வசதியிலும் பிரைவசிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சாதாரண தனிப்பட்ட சாட்களுக்கு கிடைக்கும் அதே எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பு ஷெட்யூல்டு மெசேஜ்களுக்கும் கிடைக்கும் என வாட்ஸ்அப் உறுதி அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications

