தங்கம் விலையில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுள்ள திடீர் சரிவு தான் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஜனவரியில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1,34,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதுவே இன்று 43,040 ரூபாய் விலை குறைந்து 91,360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இப்போது பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் ஒரு கேள்வி இனி தங்கம் விலை மேலும் குறையுமா? அல்லது பழைய படி உயருமா? இப்போது தங்கம் வாங்க சரியான நேரமா? அடுத்த ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது தான். இதற்கு Lemonn நிறுவனத்தின் தலைவர் கௌரவ் கார்க் ,தங்கம் விலை தொடர்பான தனது கணிப்புகளை மிண்ட் தளத்திற்கு பேட்டியாக தந்துள்ளார். அதில் 24 கேரட் தங்கம் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தற்போது 10 கிராம் 1.21 லட்சம் ரூபாயாக உள்ளது இது இந்த ஆண்டுக்குள் 1.35 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளது என்கிறார்.

அதே வேளையில் 24 கேரட் தங்கம் 10 கிராம் விலை அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1.60 லட்சம் வரை செல்ல வாய்ப்புள்ளது என கூறுகிறார். இது வரலாற்று உச்சபட்ச விலையை விட சுமார் 20,000 ரூபாய் குறைவு. அதே வேளையில் 22 கேரட் தங்கம் 10 கிராமின் விலை ஆண்டு இறுதிக்குள் 1.17 லட்சம் முதல் 1.24 லட்சம் ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது என்றும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1.33 லட்சம் ரூபாயை தொட வாய்ப்புள்ளது என்றும் கணித்துள்ளார்.
தங்கம் விலை சரிந்துள்ளதால் நகை வாங்குவதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது என கௌரவ் கார்க் கூறியுள்ளார். உடனடி தேவை உள்ளவர்கள் விலை இன்னும் குறையட்டும் என எதிர்பார்த்து காத்திருப்பதற்கு பதிலாக, இந்த சரிவை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக நகை வாங்கலாம் என கூறுகிறார்.
பிஎன் காட்கில்ஸ் நகை நிறுவன இயக்குநர் அமித் மோடக், இப்போது குறிப்பிட்ட அளவு தங்க நகை வாங்கி மீதமுள்ளதை அடுத்தடுத்த வாரங்கள் அல்லது மாதங்களில் வாங்குவது வெவ்வேறு விலை நிலைகளில் தங்கம் வாங்க வழிவகை செய்யும் என்றும் விலை ஏற்ற இறக்க ஏமாற்றம் இருக்காது என்றும் பரிந்துரைக்கிறார்.
அதே வேளையில் முதலீட்டு அடிப்படையில் பார்த்தால் புதிய முதலீடுகளுக்கு தங்கம் தற்போது ரிஸ்க்-ரிவார்டு வாய்ப்பை வழங்கவில்லை, விலை மேலும் சரிய வாய்ப்புள்ளது என ஜியோஜித் இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் கமாடிட்டி பிரிவு தலைவர் ஹரீஷ் வி கூறியுளார். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தினால் தங்கத்தின் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படும் எனவே விலை இன்னமும் சரியும் என கூறுகிறார். உலகளாவிய வட்டி விகிதங்கள், டாலர் நகர்வுகள் மற்றும் புவி சார் பதற்றங்கள், வர்த்தக மோதல்கள் ஆகியவை தான் தங்க விலையின் பாதையை நிர்ணயம் செய்யும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

