மும்பை: பொதுவாக தங்கம் பாதுகாப்பான சொத்து, சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. இதுதவிர நிதி நெருக்கடி ஏற்படும் போது கையில் உள்ள தங்கத்தை வைத்து பணம் புரட்டிக் கொள்ள முடியும் என்பதால் நம் நாட்டவர்கள் மஞ்சள் உலோகமான தங்கத்தை இயன்றளவு வாங்குவார்கள்.

மேலும் பெண்கள் தங்க நகைகளை அதிகம் விரும்புவர் மற்றும் தங்க நகை அணிவது அந்தஸ்து என்ற எண்ணமும் உள்ளது. இது போன்ற காரணங்களால் நம் நாட்டில் தங்கத்துக்கான தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.
ஆண்டின் அனைத்து நாட்களிலும் தங்கம் விற்பனை நடக்கும் என்றாலும், குறிப்பாக பண்டிகை மற்றும் கல்யாண சீசன்களில் தங்கம் விற்பனை அதிகமாக நடைபெறும்.
தற்போது பண்டிகை காலம் தொடங்கி விட்டது, தீபாவளிக்கு பிறகு திருமண காலமும் தொடங்கி விடும். இந்த நேரத்தில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று தங்கத்தின் விலை ரூ.62,600க்கு மேல் உயர்ந்தது. இன்று தலைநகர் டெல்லியில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.62,770ஆக உள்ளது. அதேவேளையில், 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.57,550ஆக உள்ளது.
தந்தேரா மற்றும் தீபாவளி போன்ற மங்களகரமான பண்டிகை நாளில் தங்கத்தை வாங்க வேண்டும் என்று பலரும் சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்திருப்பர். இப்போது தங்கத்தின் விலை உயர்ந்து வருவது அவர்களுக்கு சிறிது அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் விலை சிறிது குறைந்த பிறகு வாங்குவோமா என்று யோசிக்கவும் ஆரம்பித்தனர். அதேசமயம் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து விட்டால் என்ன செய்வது என்றும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தங்கம் விலை தொடர்பாக நிபுணர்கள் கூறுகையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மேலும் தீவிரம் அடைந்தால் எதிர்காலத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரலாம் என்று தெரிவித்தனர்.
தங்கம் விலை உயர்ந்தால் இந்தியர்கள் தங்கம் வாங்குவதை குறைத்து கொள்வார்களே தவிர வாங்குவதை முற்றிலுமாக நிறுத்தி விடமாட்டார்கள் என்பதை கடந்த கால விற்பனை நிலவரங்கள் கூறுகின்றன. இதனால் எதிர்காலத்தில் தங்கத்தின் விலை உயர்ந்தாலும் விற்பனையில் பெரிய அளவிலான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications