தங்கம் விலை கடந்த சில மாதங்களாக சரிவில் இருந்தாலும் பெரும்பாலான மக்களால் வாங்க கூடிய விலைக்கு இன்னும் வரவில்லை. அந்த வகையில் தங்கம் வாங்குவது என்பது பலருக்கும் எட்டாக்கனி தான். ஆனால் அப்படி இருந்தும் நகை கடைகளில் கூட்டம் குறையவே இல்லை. அதற்கு காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
22 கேரட் ஆபரண தங்கம் கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன் 1.34 லட்சம் ரூபாய் என வரலாற்று உச்சபட்ச விலையை தொட்டது. அதன் பின் தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. இன்று தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரண தங்கம் 13,195 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,05,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றால் இன்றைய விலைக்கு செய்கூலி, சேதாரம் ,ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து 1.20 லட்சம் ரூபாயாவது கொடுக்க வேண்டும்.

1.20 லட்சம் ருபாய் என்பது பல்வேறு நபர்களின் இரண்டு முதல் மூன்று மாத சம்பளம். இப்படி மூன்று மாத சம்பள தொகையை கொடுத்து தங்கம் வாங்க வேண்டிய சூழலில் மக்கள் இல்லை. ஏனெனில் ஏற்கனவே பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையில் தங்கம் விற்பனை குறையாது என நகை வியாபாரிகள் நம்புகின்றனர் ஏனெனில் இந்த முறை அதிகமாக லைட் வெயிட் தங்க நகைகள் விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம்.
பாரம்பரியமான மற்றும் அதிக எடை கொண்ட கனமான நகைகளுக்கு பதிலாக, மக்கள் மலிவான மற்றும் நடுத்தர மக்கள் விலை கொடுத்தும் வாங்கும் அளவில் இருக்கும் Lightweight Jewellery-களையே அதிகம் விரும்பி வாங்க தொடங்கியுள்ளனர் என நகை கடை நடத்துவோர் கூறுகின்றனர். விலை அதிகமாக இருக்கிறது என்பதற்காக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை மக்கள் கைவிடவில்லை என்கின்றனர்.
தங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப எடை குறைவான நவீன வடிவங்களை தேர்வு செய்கிறார்களாம். தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் தங்கம் வாங்குவது மங்களகரமானது என்ற பாரம்பரிய நம்பிக்கையை காப்பாற்ற, நடுத்தர குடும்பங்கள் முன்பு போல பெரிய மற்றும் கனமான நகைகளை வாங்குவதை தவிர்த்து 18 கேரட் மற்றும் லைட் வெயிட் நகைகளை வாங்குகின்றனர் என சொல்லப்படுகிறது.
22 கேரட்டை விட 18 கேரட் தங்கத்தை வாங்கும் போது குறைந்த தரமாக இருந்தாலும் நேர்த்தியான டிரெண்டிங்கான நகைகளை வாங்க முடிகிறது. அதுவும் 18 கேரட் தங்கம் விலை குறைவு என்பதால் பலரும் இதனை நோக்கி செல்கிறார்களாம். இன்றைய தேதிக்கு 22 கேரட் தங்கம் ஒரு பவுன் 1.05 ல்ட்சம் ரூபாய் என்றால் 18 கேரட் தங்கம் ஒரு பவுன் 86,000 ரூபாய் தான். அப்படி பார்த்தால் ஒரு பவுன் வாங்குவதிலேயே 20000 ரூபாய் வரை சேமிக்கலாம்.

இன்றைய தலைமுறையினர் தினமும் அணியக்கூடிய மற்றும் உடைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளக்கூடிய நவீன நகைகளை விரும்புகின்றனர். கனமான பாரம்பரிய நகைகளை எப்போதாவது மட்டுமே அணிய முடியும் என்பதால் லைட் வெயிட் நகைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது என நகைக்கடை நடத்துவோர் கூறுகின்றனர்.
மேலும் லேசான எடை கொண்ட நகைகளை அணிவது மிகவும் எளிதானது மற்றும் பாதுகாப்பானது. அலுவலகங்களுக்கும், சிறிய விழாக்களுக்கும் தைரியமாக அணிந்து செல்லலாம், பெரிய திருட்டு பயம் இல்லை என பல சாதகங்கள் உள்ளன. ஜென் ஸீ தலைமுறையினர் பெரும்பாலும் இந்த வகை நகைகளை வாங்கவே ஆர்வம் காட்டுகிறார்களாம்.
இந்நிலையில் வாடிக்கையாளர்களின் இந்த மாறிவரும் தேவையை பூர்த்தி செய்ய, முன்னணி நகைக்கடைகளும் லைட் வெயிட் தங்க நகைகளில் தான் கவனம் செலுத்துகின்றன. குறைந்த எடையில் பிரம்மாண்டமான தோற்றத்தை தரக்கூடிய நகைகளை அதிகமாக விளம்பரம் செய்கின்றன.
தங்கம் விலை அதிகமாக இருந்தாலும், தங்கத்தின் மீதுள்ள முதலீட்டு ஆர்வம் மக்கள் மத்தியில் குறையவில்லை. அதிக எடையில் வாங்குவதற்கு பதிலாக, லைட் வெயிட் தங்க நகைகள், 18 கேரட் தங்க நகைகள், தங்க நாணயங்கள் , தங்க கட்டிகளை வாங்கி இந்திய மக்கள் தங்களது தங்கம் வாங்கும் பாரம்பரியத்தை தொடர்கின்றனர் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
எனவே தீபாவளி பண்டிகைக்காக தங்க நகை வாங்க திட்டமிட்டு இருக்கக்கூடிய மக்கள் இந்த ஆண்டில் லைட் வெயிட் எனப்படும் குறைந்த கேரட் மற்றும் குறைந்த எடை கொண்ட தங்க நகைகளை முயற்சி செய்து பார்க்கலாம். இவ்வாறு குறைந்த எடை கொண்ட தங்க நகை மற்றும் 18 கேரட் மற்றும் அதற்கும் கீழ் கேரட் கொண்ட தங்க நகைகளை வாங்கும் போது சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
22 கேரட் தங்கம் வாங்கும் போது எப்படி ஹால்மார்க் குறியீடு இருக்கிறதா என்பதை கவனிப்பீர்களோ அதே போல 18 கேரட் மற்றும் அதற்கும் கீழ் கேரட் தரம் கொண்ட தங்கத்தை வாங்கும் போதும் ஹால்மார்க் குறியீடு இருக்கிறதா என்பதை கவனித்து வாங்க வேண்டும். மேலும் நீங்கள் வாங்கக்கூடிய நகைகளுக்கு மிகச்சரியான ரசீதை கேட்டு பெற வேண்டும். குறைந்த விலை என்ற ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து விடக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

