தமிழகத்திற்கும், தங்கத்திற்கும் எப்போதும் பிரிக்க முடியாத பந்தம் இருக்கும். கையில் பணம் இருந்தால் மாதம் 1 கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எண்ணமாக இருக்கிறது. ஏனெனில் நம்மூர் மக்கள் தங்கத்தை அணிகலன்களாக அணிவதை விட அவசரக் காலத்தில் அதை வைத்து பணம் பெறுவதற்காகவே வாங்கி வருகின்றனர். இதில் ஒரு நன்மையும் இருக்கிறது. பணம் கேட்டால் சொந்தங்களே தருவதற்கு அஞ்சும் சூழலில், உடனே பணம் கிடைக்கும் என்றால் அதை தானே அனைவரும் பின்பற்றுவார்கள். இதோடு தொடர்ந்து எகிறும் தங்க விலையும் மக்கள் தங்கத்தை அதிகம் வாங்க காரணமாகி போனது.

2020-ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட தங்க விலைக்கும், தற்போது விற்பனை செய்யப்படும் தங்க விலைக்குமே பெரிய வித்தியாசம் இருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் வெறும் 5000 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. ஆனால் இப்போது தங்க விலையை யோசித்துப் பாருங்கள்.
1 கிராம் 22 கேரட் ரூ.14,000-த்தைக் கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் தங்கத்தை நகைகளாக வாங்குவது நல்லதா? அல்லது நாணயங்களாக வாங்குவது நல்லதா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இந்தப் பதிவில் அது குறித்த விபரங்களைப் பார்ப்போம்.
தங்க முதலீடு: முன்பெல்லாம் நகைக்காக தங்கம் வாங்கி வந்த சிலர், தற்போது முதலீட்டுக்காக தங்கத்தை வாங்கத் தொடங்கியுள்ளனர். வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. வெளியான அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின் படி கடந்த மார்ச் காலாண்டில் மட்டும் மக்கள் நகைகளாக வாங்குவதைவிட கோல்ட் காயின்கள் மற்றும் கோல்டு பார்களில் அதிகம் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் காலாண்டை விட இந்த ஆண்டு 52 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கோல்ட் காயின்களை வாங்கியுள்ளனர். அதே நேரத்தில் ஆபரணத் தங்கத்தின் தேவையும் 19.5 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதிலிருந்து மக்கள் தங்கத்தை அழகிற்காக வாங்குவதை விட்டு எதிர்கால சேமிப்புக்காக பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
ஆக நகைகளோ! காயின்களோ! எவ்வளவு விலை உயர்ந்தாலும் தங்கத்தை தொடர்ந்து மக்கள் வாங்கி வருகின்றனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இந்தியாவில் மொத்த தங்க நுகர்வு தற்போது 10.2% அதிகரித்து 151 மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது. இதில் இந்தியாவில் இருக்கும் இல்லத்தரசிகளின் பங்கு பெரும்பங்காக உள்ளது. கையில் சிறிது பணம் சேர்ந்தாலோ அல்லது போனஸ் கிடைத்தாலோ உடனே நகைக்கடையை பார்க்க சென்று விடுவார்கள். இதனால் தான் இந்திய வீடுகளில் இருக்கும் தங்கத்தின் அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
நகைகள், நாணயங்கள் அல்லது கோல்ட் பார்கள் எதை வாங்குவது சிறப்பு? என்று பார்ப்போமா?
நாணயங்கள்: கோல்ட் காயின்களை நீங்கள் 24 கேரட் தங்கத்தில் வாங்கலாம். 24 கேரட் தங்கம் தூய தங்கமாக இருக்கும். இதை வைத்து நகைகள் செய்ய முடியாது. ஆனால் 22 கேரட் தங்கத்தை விட இது விலை சற்று அதிகம். இவற்றை விற்பதும் வாங்குவதும் எளிதானது. இதற்கு நீங்கள் செய்கூலி, சேதாரம் போன்ற விஷயங்களுக்கு செலவு செய்ய தேவையில்லை. மாறாக டையிங் சார்ஜ் மற்றும் இதர கட்டணங்களை நகைக்கடைக்காரர்கள் வசூலிப்பார்கள். ஜிஎஸ்டி கட்டணம் இருந்தால் அதையும் செலுத்தி தான் கோல்ட் காயின்களை வாங்க முடியும்.
கோல்ட் பார்கள்: தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால் கோல்ட் பார்களில் முதலீடு செய்யலாம். தங்க நகைகளை வாங்கும் போது அதற்கு செய்கூலி போன்றவற்றை செலுத்த வேண்டியிருக்கும். மேலும் அவற்றை நீங்கள் அணிந்துவிட்டு விற்பனை செய்கிறீர்கள் என்றால், அதற்கு சேதாரம் கழித்தது போக தான் உங்களுடைய நகையை கடைக்காரர் எடுத்துக் கொள்வார். முதலீட்டு நோக்கத்திற்காக வாங்க வேண்டும் என்றால் அதற்கு கோல்ட் காயின்கள் அல்லது கோல்ட் பார்கள் சிறந்த தேர்வாக இருக்கும். அதுவே ஆசைப்பட்டு நகையாக போட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு தங்க நகைகளை வாங்கிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications