உலக அளவிலும் இந்தியாவிலும் தற்போது தங்கம் விலை சரிவில் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்று உச்சத்தை தொட்ட தங்கம் அதன் பின் படிப்படியாக விலை குறைந்தது. ஜனவரியில் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 1.34 லட்சம் ரூபாயை தொட்டது. அதன் பின்னர் கடந்த 3 மாதங்களாக 1.08 லட்சம் முதல் 1.20 லட்சத்திற்குள் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது.
தற்போது தங்கம் விலை இறங்குமுகமாக இருக்கிறது. இந்த விலை குறைவு வாய்ப்பினை பயன்படுத்தி தங்கத்தில் முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஏனெனில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தங்கம் விலை மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தை தொடும் என துறை சார்ந்த நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்க டாலரின் ஆதிக்கம் குறைந்து வருவது, உலக நாடுகள் தங்கத்தை அதிகளவில் வாங்கி குவிப்பது போன்ற காரணங்களால் தங்கத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்கின்றனர்.

அண்மையில் ஃபைனான்சியல் டைம்ஸ் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய Troy asset Management நிறுவன தலைவர் சார்லட் யேஞ்ச் , அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் தங்கம் புதிய சாதனை விலையை எட்டும் என தெரிவித்தார். அமெரிக்க கடன் சுமை அதிகரிப்பதை சுட்டிக்காட்டும் அவர், அதில் இருந்து பாதுகாக்க தங்கம் ஒரு சிறந்த அரணாக செயல்படுகிறது என்றார். எதிர்கால பொருளாதார மந்தநிலையின் போது மத்திய வங்கிகள் பண விநியோகத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால், காகித நாணயங்கள் மீதான நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது என கூறினார். எனவே மீண்டும் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகமாகும் என குறிப்பிடுகிறார்.
Aon Investments நிறுவனத்தின் பால் கார்ன் , அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகள் மற்றும் டாலரை ஒரு புவிசார் அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவது போன்ற காரணங்களால், பல நாடுகளும் அமெரிக்க டாலருக்கு மாற்றான வழிகளை தேட தொடங்கியுள்ளன என்றார். அவர்களீன் முதல் சாய்ஸ் தங்கம் தான் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
Allied Gold நிறுவனத்தின் தலைவர் பீட்டர் மாரோன், பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் போது, பெரு முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்துவதாகவும், அரசாங்க பத்திரங்களில் இருந்த முதலீட்டை குறைத்து தங்கத்திற்கு மாறுவதாகவும் தெரிவித்தார். அதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க டாலரை மட்டும் நம்பி இருக்கமல் தங்கம் வாங்கி வைக்க வேண்டும் என பல வளரும் நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகின்றன. அந்த வகையில் சீனா தனது தங்க கையிருப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையே பல்வேறு நாடுகளும் பின்பற்றி வருவதால் தற்போது விலை குறைந்திருந்தாலும் மீண்டும் படிப்படியாக விலை உயர தொடங்கும் என்பதே இவர்களின் கணிப்பு.
மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி சேமிப்பது, அமெரிக்க டாலர் மீதான நம்பகத்தன்மை குறைவு, அதிகரித்து வரும் அரசாங்க கடன்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார பதற்றங்கள் காரணமாக, வரவிருக்கும் ஆண்டுகளில் தங்கம் விலை புதிய உச்சங்களை தொடக்கூடும் என இந்த நிபுணர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
எனவே பொதுமக்களாகிய நாம் இன்னமும் தங்கம் விலை குறையட்டுமே என காத்திருக்காமல் தற்போதைய விலை குறைவே நல்ல வாய்ப்பு தான் என கருதி தங்கத்தில் முதலீடு செய்து வைத்தால் அடுத்த 2 ஆண்டுகளில் நல்ல லாபம் பார்க்க முடியும் என இதன் மூலம் கணிக்கப்படுகிறது. இன்று 24 கேரட் ஆபரண தங்கம் 14,744 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, 10 கிராம் விலை 1.47 லட்சமாக உள்ளது, இது ஜனவரி மாதம் 1.83 லட்சம் ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. இவர்களின் கணிப்பை பார்த்தால் தங்கம் விலை இதனையும் தாண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

