உலகளாவிய முன்னணி முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs), தங்கம் விலை தொடர்பான தனது முந்தைய கணிப்புகளை மாற்றியமைத்து புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அண்மைகாலமாக தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் கோல்ட்மேன் சாக்ஸின் இந்த அறிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதன்படி நடப்பாண்டின் இறுதிக்குள் அதாவது டிசம்பருக்குள் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 4,150 டாலர் என்ற அளவை எட்டும் என கூறியுள்ளது. தற்போது 3,840 டாலர்களாக தங்கம் விலை உள்ளது. இதன் மூலம், தங்கம் விலையில் பெரிய ஏற்றம் இருக்காது என்றே கோல்ட்மேன் சாக்ஸ் கூறுகிறது. மேலும் 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,800 டாலர்களாக இருக்கும் என புதிய இலக்கை நிர்ணயித்துள்ளது.

தங்கத்தின் வரலாற்று உச்சபட்ச விலை 5,600 டாலர்கள் ஆனால் அதில் இருந்து1200 டாலர்கள் சரிவில் தான் தங்கம் இருக்கும் என இந்த அறிக்கை கூறுகிறது. எனவே அடுத்த ஆண்டு இறுதி வரை தங்கம் விலை மீண்டும் தனது வரலாற்று உச்சபட்ச விலையை எட்டவோ அதனை தாண்டவோ வாய்ப்பில்லை என்பதை தான் இந்த அறிக்கை மறைமுகமாக கூற வருகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனை இந்திய விலை நிலவரத்துடன் ஒப்பிட்டால் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை சுமார் 1.20 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது வரலாற்று உச்சபட்ச விலையை விட சவரனுக்கு 13,000 ரூபாய் குறைவாகும். அதாவது தங்கம் விலை சிறிது காலம் திருத்தில் தான் இருக்கும் என்ற கணிப்பில் தான் கோல்ட்மேன் சாக்ஸ் விலை இலக்கை குறைத்துள்ளது என சொல்லப்படுகிறது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரிக்கும் வாய்ப்பு உயர்ந்துள்ளது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட டிசம்பர் மாத வட்டி உயர்வுடன் சேர்த்து, 2027 மார்ச் மாதத்திலும் கூடுதலாக ஒருமுறை 25 அடிப்படை புள்ளிகள் வட்டி உயர்த்தப்படலாம் என கோல்ட்மேன் சாக்ஸ் பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர். அடுத்ததாக இந்த வட்டி உயர்வு நடவடிக்கைகள் காரணமாக, பாதுகாப்பான புகலிடமாக தங்கத்தை வாங்கும் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது என கூறுகிறது.
அடுத்த ஓராண்டுக்கு விலை கணிப்புகள் குறைக்கப்பட்டாலும், தங்கம் மீது நீண்டகால அடிப்படையில் வங்கி உறுதியான நம்பிக்கையுடன் உள்ளது. உலகளாவிய மத்திய வங்கிகள் குறிப்பாக சீனாவின் மத்திய வங்கி உட்பட பல நாடுகளின் வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்குவது சந்தைக்கு வலு சேர்க்கிறது என்கிறது.
அடுத்த 3 முதல் 6 மாதங்களுக்கு, பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு அச்சம், எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்க முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. தற்போது தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திருத்தம், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு சிறந்த முதலீட்டு வாய்ப்பாக இருக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

