இன்றைய தலைமுறையினர் பணத்தை சேமிப்பதை காட்டிலும் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளனர். பணத்தை சேமிப்பதால் நமது செல்வம் பெரிய அளவில் பெருக வாய்ப்பில்லை. அதேசமயம் பணத்தை முதலீடு செய்தால் அது நம் செல்வத்தை பல மடங்கு பெருக்கும். அதனால்தான் இளைஞர்கள் தங்களது பணத்தை தங்கம், பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டு போன்றவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் தற்போது சந்தை நிலவரமும் சரியில்லை, தங்கம் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதனால் முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளில் முதலீடு செய்யலாமா அல்லது தங்கத்தில் பணத்தை போடலாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். சிலர் எதுக்கு இந்த நேரத்தில் தேவையில்லாத ரிஸ்க் பேசாமல் பணத்தை பிக்சட் டெபாசிட் அல்லது பத்திரங்களில் முதலீடு செய்தால் கொஞ்சம்தான் கிடைக்கும் என்றாலும் நிரந்தரமாக ஒரு வருமானம் வந்து கொண்டு இருக்கும் என்றும் யோசிக்க தொடங்கி விட்டனர். இந்நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வதும், நிரந்தர வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வதன் நன்மைகளை பிரபல நிபுணர் ஒருவர் அழகாக எடுத்துரைத்துள்ளார்.

கோடக் அல்டர்னேட் அசெட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் முதலீடு மற்றும் உத்தி பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி ஐயர் கூறுகையில், தங்கம் பகவான் விஷ்ணு போன்றது. பகவான் விஷ்ணு உலகை காப்பதை போல், நீங்கள் தங்கத்தில் செய்யும் முதலீடு உங்கள் போர்ட்ஃபோலியோவை பாதுகாக்கும். மேலும் நிதி நிலையை சமநிலைப்படுத்தும். தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்த நன்மை உள்ளது.
நிரந்தர வருமானமும் சின்ட்ரெல்லாவும் ஒன்று. ஏழை பெண் சின்ட்ரெல்லாவுக்கு தேவதை உதவும் கதையை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதுபோல் குறைவாக எதிர்பார்க்கும்போது, நிரந்தர வருமானம் அதன் மதிப்பை நிரூபிக்கும். பிக்சட் டெபாசிட் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் நாம் தொடர்ந்து நிரந்தர வருமானத்தை பெறலாம். அதேசமயம் நமது ஒட்டு மொத்த முதலீட்டையும் ஒரே திட்டத்தில் முதலீடு செய்வதும் தவறு. பங்குகள், தங்கம், பிக்சட் டெபாசிட், பத்திரங்கள் என நமது முதலீட்டை பரவலாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
Story written: Subramanian


Click it and Unblock the Notifications