இடைக்கால தேர்தல் முடிவுகளில் கடும் தோல்வியை சந்தித்ததால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் விவகாரத்தில் சிறிது காலம் தீவிரம் காட்டமாட்டார் என சொல்லப்பட்ட நிலையில் அவர் மீண்டும் வேலையை காட்ட தொடங்கி விட்டார்.
வரும் புத்தாண்டுக்குள் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரான் மீது மீண்டும் இராணுவ தாக்குதல்களை தொடங்குவோம் என டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார். ஈரானின் பேச்சுவார்த்தை அணுகுமுறைகளை கடுமையாக விமர்சித்துள்ள அவர், பேச்சுவார்த்தையில் எவ்வித உருப்படியான முன்னேற்றமும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரான் எவ்வித உறுதியான முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதாக விமர்சித்தார். அவர்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் செய்வது எல்லாம் பேச்சு மட்டும்தான், ஆனால் அதெல்லாம் முட்டாள்தனம் என கூறியுள்ளார்.
முன்னதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது கடினமானதல்ல என கூறியதாக ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதுள்ள நெருக்கடியை தீர்க்க வேண்டுமானால், அமெரிக்கா தனது தவறுகளை ஒப்புக்கொண்டு, முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அராக்சி கூறினார் என தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது போரை தொடங்கின.
இந்த போரில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உட்பட ஏராளமான தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகம் தடைபட்டு நிற்கிறது. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு மேலாக பல்வேறு நாடுகளும் ஸ்தம்பித்து போய் நிற்கின்றன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருட்கள் விலை ஏறி அதன் விளைவாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை வாசிகளும் உயர்வு கண்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கான சாமானிய மக்கள் தினமும் அல்லல் பட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
ஈரான் போர் முடிவுக்கு வந்து முடிவுக்கு வந்து கச்சா எண்ணெய் சப்ளை சீரானால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் அமெரிக்காவும் ஈரானும் எந்த உடன்பாடும் எட்டாமல் தொடர்ச்சியாக வார்த்தை மோதல்களில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றன. இது பல்வேறு நாடுகளுக்கும் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையே சமாதான முயற்சியை முன்வைத்த பல்வேறு நாடுகளும் சோர்வடைந்து காணப்படுகின்றன.


Click it and Unblock the Notifications

