இந்திய பங்குச்சந்தைகள் இன்று வேகமாக உயர்வு கண்டு முதலீட்டாளர்களுக்கு 4.67 லட்சம் கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளனர். இன்றைய தினம் பங்குச்சந்தையின் திடீர் உயர்வுக்கு என்ன காரணம், இனி வரும் நாட்களிலும் பங்குச்சந்தை இப்படியே இருக்குமா என்பதை பார்க்கலாம்.
பங்குச்சந்தையில வங்கி, நுகர்வோர் பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை சேர்ந்த பங்குகள் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றம் கண்டன. இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 2% உயர்ந்தன. சென்செக்ஸ் 83,436 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது, பின்னர் படிப்படியாக ஏறி 84,498 புள்ளிகள் என உயர்வு கண்டது.

நிஃப்டி குறியீடு காலை 25,658 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கி பின்னர் 25,951 புள்ளிகளாக நாளின் உச்சத்தை தொட்டது. இந்த அதிரடி உயர்வால், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் 4.67 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்து, இரு குறியீடுகளும் சுமார் 2% வீழ்ச்சியடைந்திருந்தன. நேற்று பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சந்தை வலுவாக மீண்டுள்ளது.
சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 4% வரை உயர்ந்து சந்தையின் ஏற்றத்திற்கு தலைமை தாங்கின. மறுபுறம், டாடா ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா , டைட்டன், பவர் கிரிட் கார்ப்பரேஷன் மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகள் சரிவை சந்தித்தன.
நிஃப்டி குறியீட்டில் 9.9% பங்களிப்பை கொண்டுள்ள தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி 3%-க்கும் மேல் உயர்ந்து, முந்தைய அமர்வில் ஏற்பட்ட அனைத்து இழப்புகளையும் ஈடுகட்டியது. மேலும், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிற முன்னணி நிறுவன பங்குகளும் 4% வரை உயர்ந்தன. அமெரிக்க பங்குச்சந்தையில் ஏஐ பங்குகள் சரிவை சந்தித்தன, அதே வேளையில் தங்கம் விலையும் குறைந்து வருகிறது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் தங்களின் பணத்தை இந்திய பங்குச்சந்தை பக்கம் திருப்பியுள்ளனர். இந்த மாதத்தில் இதுவரை இந்திய சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 13.2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். இதனால் பங்குச்சந்தை ஏற்றம் இன்று சற்று அதிகமாகவே இருந்தது.
இரண்டாம் காலாண்டில் நிஃப்டி 50 நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி 27% என்ற சிறப்பான அளவில் உள்ளது. இது இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் மேம்பட்டு வருவதை காட்டுகிறது எனவே வெளிநாட்டு முதலீடுகள் குவிகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர். இன்று மாலை வெளியாகவுள்ள அமெரிக்க தனிநபர் நுகர்வு செலவின குறியீட்டை உலகச் சந்தைகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன. இதன் முடிவுகளை பொறுத்து நாளை முதல் பங்குச்சந்தைகள் செயல்பட வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

