இந்தியாவில் தங்க நகை தொழில்கள் தான் டாப் பிஸ்னஸ்களாக இருக்கின்றன. ஒன்று தங்க நகைகளை விற்க வேண்டும் இல்லை என்றால் தங்க நகை அடகு நிறுவனங்களை நடத்த வேண்டும். இந்த இரண்டுமே காலத்திற்கு அழியாதவை என்பதை நிரூபித்து பல நிறுவனங்களும் வெற்றி பெற்றுள்ளன. அப்படி ஒரு நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளரின் வெற்றி கதையை பார்ப்போம்.
கேரளாவின் கோழிக்கோடு நகரை மையமாக கொண்டு தொடங்கிய ஒரு சிறிய நகை கடை, இன்று இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றாகவும், உலகளாவிய அளவில் மிகப்பெரிய நகை சில்லறை வர்த்தக குழுமங்களில் ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது. அதுதான் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ். இந்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பவர் மலபார் குழுமத்தின் நிறுவனர் எம். பி. அகமது.

1957ஆம் ஆண்டு கேரளாவின் கோழிக்கோட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்த அகமது கோழிக்கோடு அரசு உயர்நிலை பள்ளியில் பள்ளி படிப்பையும், காலிக்கட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகவியல் பட்டத்தையும் முடித்தார். அந்த சமயத்தில் இவரது தந்தை இறந்து போகவே வீட்டை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் காய்கறிகள், மசாலா பொருட்கள், மிளகு, ஏலக்காய் மற்றும் கொப்பரை வர்த்தகத்தில் ஈடுபட்டார்.
அப்போது தான் அவருக்கு வர்த்தகம் என்றால் என்ன, ஒரு பிராண்டை எப்படி உருவாக்க வேண்டும் எப்படி அதனை மக்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டும் என்ற அனுபவங்கள் கிடைத்தன. 1990-களில் தங்கம் மற்றும் நகை வர்த்தகத்தில் இறங்க அவர் முடிவு செய்தார். அப்படி 1993-ஆம் ஆண்டில் சுமார் 50 லட்சம் ரூபாய் தொடக்க முதலீட்டில் கோழிக்கோட்டில் ஒரு சிறிய சில்லறை நகை கடையாக மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் தொடங்கப்பட்டது.
1999 முதல் BIS ஹால்மார்க் தரமுடைய நகைகளை விற்க தொடங்கி வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கையை வலுப்படுத்தியது. இந்திய ரசனைகளுக்கு ஏற்ப வடிவமைப்புகள் என பிராண்டை விரிவாக்கம் செய்தது. 2001-ல் வளைகுடா நாடுகளில் காலடி வைத்த மலபார் குழுமம், படிப்படியாக 13-க்கும் மேற்பட்ட நாடுகளில் நூற்றுக்கணக்கான ஷோரூம்களை கொண்ட சர்வதேச நிறுவனமாக மாறியது. தற்போது 445 ஷோரூம்களுடன் 66,872 கோடி ரூபாய் வருமானம் கொண்ட குழுமமாகவும் 1567 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் குழுமமாகவும் மாறியுள்ளது.
தற்போது நகைத் தொழிலை தாண்டி ரியல் எஸ்டேட் , சில்லறை மின்னணு சாதனங்கள் விற்பனை போன்ற துறைகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சமூக நல திட்டங்களுக்காக லாபத்தின் ஒரு பகுதியை ஒதுக்குவது, பசி இல்லாத உலகம் போன்ற உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான தங்குமிட திட்டங்கள் ஆகியவற்றையும் மலபார் குழுமம் செயல்படுத்தி வருகிறது. அகமது 1 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவராக ஃபோர்ப்ஸ் பட்டியலிலும் இடம்பிடித்துவிட்டார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

