உலக சந்தையில் தொடர்ச்சியாக விலை சரிந்து வந்த தங்கம் திடீரென விலை உயர தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவின் எம்சிஎக்ஸ் சந்தையிலும் தங்கம் விலை ஏற்றத்துடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இது கண்டிப்பாக சில்லறை விற்பனையிலும் எதிரொலிக்கும். அதாவது இன்று தமிழ்நாட்டிலும் தங்கம் விலை உயர போகிறது.
உலக சந்தையில் கடந்த 2 வாரங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தாறுமாறாக விலை சரிவை சந்தித்தன. அதுவும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை 9% சரிந்து 14 மாத குறைந்தபட்ச அளவை எட்டியிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் எழுச்சி கண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு செலவினங்கள் குறித்த கவலைகளால் தொழில்நுட்ப பங்குகள் சரிந்ததை தொடர்ந்து, அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் குறுகிய காலத்தில் வட்டி விகிதங்களை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு குறைந்து வருவதாக சர்வதேச வர்த்தகர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக தங்கம் ஒரு அவுன்ஸுக்கு சுமார் 3,607 அமெரிக்க டாலர்கள் அதாவது ஒரே நாளில் 93 டாலர்கள் உயர்ந்துள்ளது. தங்கம் விலை ஒரே நாளில் 2.63% அளவுக்கு உயர்ந்துள்ளது.
அதே போல வெள்ளி விலையும் சரிவில் இருந்து மீண்டு 42.26 டாலர்களாக ஒரே நாளில் 2.59% விலை கூடியுள்ளது. உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததால் இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 2,270 ரூபாய் விலை உயர்ந்து 1,24,179 ரூபாய் என ஏற்றத்துடன் வர்த்தகமானது. வெள்ளி விலை கிலோவுக்கு 1,51,041 ரூபாயாக உயர்வு கண்டுள்ளது.
இதற்கிடையே சமீபத்திய பணவீக்க தரவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஃபெடரல் வங்கி அதிகப்படியான இறுக்கமான கொள்கையை பின்பற்றினால், அது அமெரிக்க பொருளாதாரத்திற்கே ஆபத்தை விளைவிக்கும் என அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார். இதனால் அடுத்த மாத கூட்டத்தில் பெடரல் வங்கி வட்டியை உயர்த்தும் வாய்ப்பு குறைந்து வருவதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர். இதனால் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். எனவே தங்கம் விலை உலக சந்தையில் உயர தொடங்கியுள்ளது.
டெக்னிக்கல் ரீதியாக தங்கம் over sold நிலைக்கு சென்றுவிட்டதாக கூறும் நிபுணர்கள் இனி பலரும் தங்கம் வாங்க தொடங்குவார்கள், எனவே விலை ஏற்றத்தை காணலாம் என்கின்றனர். உலக சந்தையில் தங்கம் விலை ஏறுவது இந்தியாவிலும் எதிரொலிக்கும். எனவே தங்கம் விலை சரிவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்துவிட்டதாக சொல்லபப்டுகிறது. பெரிய அளவில் அதாவது வரலாற்று உச்சத்தை தாண்டும் அளவுக்கு தங்கம் விலை உயர்வு இருக்காது என்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

