தங்க நகைகளில் கலப்படம் நடப்பதாக கடந்த சில தினங்களாக வெளிவரும் தகவல்கள் மக்களை அச்சமடைய வைத்துள்ளன. தங்கம் விலை சரிந்துள்ள இந்த நேரத்தில் பலரும் நகை வாங்க கடைகளுக்கு செல்லும் நிலையில் தங்கத்திலும் கலப்படமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்திய ரத்தினங்கள் மற்றும் நகை விற்பனையாளர்களின் உள்நாட்டு கவுன்சில் (GJC) , தங்க நகைகளில் கலப்படம் நடப்பதாக வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய தர நிர்ணய ஆணையம் இந்த விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், நகை வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆனால் தேவையற்ற பீதியடைய தேவையில்லை என்றும் இந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

தங்க நகைகளில் தங்கத்துக்கு பதில் ரீனியம் மற்றும் இரிடியம் அடிப்படையிலான உலோக கலவைகள் கலக்கப்படுவதாகவும் இவை தங்கத்தின் உண்மையான தூய்மை அளவை மறைத்து எடையை கூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருந்தாலும் இது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், சோதனை முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் GJC தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் என 6 லட்சத்திற்கும் அதிகமான ரத்தின மற்றும் ஆபரண தொழில்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பான GJC, இந்த விவகாரம் குறித்து BIS-க்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.
GJC தலைவர் ராஜேஷ் ரோக்டே இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்க தொழில் நடத்துவோர் மற்றும் வாடிக்கையாளர்கள் பீதியடைய வேண்டாம், இந்திய தர நிர்ணய அமைப்பு இந்த விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
நகை விற்பனை செய்பவர்கள் நகை உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் பிற சப்ளையர்களிடமிருந்து வாங்கும் தங்கத்தின் மீது கடுமையான தரக் கட்டுப்பாட்டு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். BIS ஹால்மார்க்கிங் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும், வழக்கத்திற்கு மாறான சலுகைகளால் ஈர்க்கப்படாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.
தங்க நகைகள் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் குறைந்த செய்கூலி சலுகைகளை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், நம்பகமான மற்றும் நற்பெயர் பெற்ற நகை கடைகளில் மட்டுமே நகைகளை வாங்க வேண்டும் என கூறியுள்ளார். நகை வாங்குவதற்கு முன்பே அதன் ஹால்மார்க் விவரங்களை BIS Care App மூலம் சரிபார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் நகை வாங்கும் போது முறையான ரசீதினை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும், நகையில் ஹால்மார்க் மற்றும் HUID எண் இல்லை என்றால் அதனை வாங்க கூடாது என்றும் கூறுயுள்ளார். சந்தேகத்திற்குரிய கலப்படம், மோசடி செயல்பாடுகள் அல்லது முறைகேடுகள் ஏதேனும் கவனத்திற்கு வந்தால், நகை வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications

