தங்கம் விலை சர்வதேச அளவில் அதன் உச்ச விலையில் இருந்து சுமார் 27% சரிந்துள்ளது, இதேபோல் இந்திய விலை அளவுகளைப் பார்க்கும் போது சுமார் 20% வீழ்ச்சியில் உள்ளது. இந்த நிலையில் தங்கத்தில் முதலீடு செய்யப் பலர் முயற்சி செய்யும் வேளையில் அதன் அடிப்படையைக் கவனிக்காமல் முடிவு செய்கின்றனர். இதனால் பெரும் சிக்கலிலும் மாட்டிக்கொண்டு உள்ளனர்.
தங்கத்தில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என முடிவு செய்த முதலீட்டாளரா நீங்கள் இருந்தால், முதலில் இந்த 5 முக்கிய விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

தங்கம் விலை சரிவுக்கு என்ன காரணம்?
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் பல முறை கூறியது போல் தங்கம் விலையை நிர்ணயம் செய்வதில் இந்தியாவில் பங்கு மிகவும் குறைவு. அந்த வகையில் அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பது மட்டும் அல்லாமல் அக்டோபர் மாதம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உயர்ந்துள்ளது.
அந்நாட்டின் பணவீக்கம் தற்போது உச்ச இலக்கான 4 சதவீதத்தைத் தாண்டி உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் டிசம்பர் மாதம் நடக்கும் பெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை கூட்டத்தில் ஏற்கனவே உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்த 90 சதவீத வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக வட்டி விகிதம் உயரும்போது அரசு பத்திரங்களின் முதலீடுகளில் அதிக வட்டி வருமானம் கிடைக்கும். ஆனால் தங்கம் இத்தகைய வட்டி வருமானம் அளிக்காத காரணத்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் செய்த முதலீட்டை எடுத்து பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர்.
எனவே உலகளவில் இருக்கும் டாலர் மீண்டும் அமெரிக்கச் சந்தைக்கு வரும் காரணத்தால் அமெரிக்க டாலர் மதிப்பு தற்போது 19 மாத உச்சத்தில் இருக்கிறது. டாலர் மதிப்பு உயர்வதும் தங்கத்தின் விலைக்கு பெரும் நெருக்கடியாகும்.
இப்போது தங்கம் வாங்குவது யார்..?
உலகளவில் தற்போது பெரும் தங்க நுகர்வோராக இருப்பது உலக நாடுகளின் மத்திய வங்கி தான், உதாரணமாகச் செப்டம்பர் மாதத்தில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் சுமார் 61 டன் தங்கம் வாங்கியுள்ளன. இது நவம்பர் 2024-க்குப் பிறகு அதிகபட்ச அளவாகும்.
இதில் முக்கியமாக போலந்து 25 டன்னும், சீனா 23 டன்னும் தங்கம் வாங்கியுள்ளன. மேலும் உலகளவில் Gold ETF-களில் சுமார் 211 டன் அளவிலான தங்கத்தில் முதலீடு குவிந்துள்ளது. பெரும்பாலான பெரும் முதலீட்டாளர்கள் தங்கம் விலை குறையும் போது வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர்.
தங்கத்திற்கு புதிய நெருக்கடி
எரிபொருள் விலை உயர்வு, ஊழியர்களின் சம்பளம் என பல்வேறு காரணத்தால் ஒரு அவுன்ஸ் தங்கத்தை உற்பத்தி செய்வதற்கான மொத்தச் செலவு 2026ஆம் ஆண்டில் 1,790 டாலரிலிருந்து 1,930 டாலராக உயர்ந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தங்கம் விலை குறைவது தங்க உற்பத்தியாளர்களுக்கு பெரும் நெருக்கடியாக அமையும்.
கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP முதலீடு நிறுத்தம்!
மத்திய அரசு ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கோல்டு மற்றும் சில்வர் ETF Fund-of-Funds (FoFs) புதிய முதலீடுகளை ஏற்பதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதன் வாயிலாக தற்போது ஹெச்டிஎப்சி. கோட்டாக், ICICI Prudential உள்ளிட்ட 17 AMC நிறுவனங்கள் தங்கள் ஈடிஎப் பண்டுகளில் புதிய SIP மற்றும் லம்சம் முதலீடுகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
இதனால் மியூச்சுவல் ஃபண்டு வாயிலாக தங்கத்தில் செய்யப்படும் பெரும் முதலீட்டாளர்களின் முதலீடுகள் முடங்குகிறது. இதனால் பெரியளவிலான விலை உயர்வுக்கான வாய்ப்புகளும் முடங்கியுள்ளது.
உண்மையில் தங்கத்தில் எவ்வளவு முதலீடு செய்யலாம்..?
எந்தொரு முதலீட்டாளராக இருந்தாலும் தங்களுடைய மொத்த முதலீட்டு போர்ட்போலியோவில் 10% முதல் 15% வரை தங்கத்தில் வைத்திருப்பது பொதுவான பரிந்துரையாக உள்ளது.
ஆனால் பிப்ரவரி மாதம் ஏற்பட்ட சரிவுக்குப் பின்பு பலர் தங்கத்தை வாங்கி குவித்தனர், பலரும் தங்களுடைய போர்ட்போலியோவில் சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமாகத் தங்கத்தில் முதலீடு செய்திருந்தனர். இவர்களுக்கு தான் தற்போது பெரிய சிக்கல்.
தற்போதைய சூழ்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் தங்கத்தின் விலை எப்போது அடிமட்டத்தைத் தொடும் என்று காத்திருக்காமல், படிப்படியாக, பகுதி பகுதியாகத் தங்கம் விலை குறையும் போது தங்கத்தை வாங்கலாம்.
உதாரணமாக நீங்கள் 100 கிராம் தங்கம் வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த வாரம் விலை குறையும் போது 10 கிராமும், அடுத்த வாரம் விலை போக்கை பார்த்து ஒரு 10 கிராமும் வாங்குவது மூலம் பெரிய அளவிலான இழப்பை ஈடுகட்ட முடியும். இதேபோல் விலை உயரும் போதும் பெரிய லாபம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications

