உலக சந்தையில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஒவ்வொரு வரலாற்று உச்சபட்ச விலையை எட்டியது. ஜனவரி மாதத்திற்கு பின் தங்கம் விலை குறைந்தது. இந்த மூன்று மாதங்களாக தங்கம் விலை திருத்தத்தில் இருக்கிறது.
ஜனவரி மாத இறுதியில் வரலாற்று உச்சபட்ச விலை எட்டிய தங்கம் அதன் பிறகு படிப்படியாக சரிந்து ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தாக்கம் இந்திய சந்தையிலும் வலுவாக எதிரொலித்தது. சென்னையில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி அன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1,34,000 ரூபாய் என்ற உச்சபட்ச விலையை எட்டியது. ஆனால் அதன் பின்னர் தங்கத்தின் விலை படிப்படியாக சரிந்தது.

பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் 30 வரையிலான இந்த மூன்று மாத அளவில் தங்கத்தின் விலை 1,20,000 ரூபாய்க்குள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த மூன்று மாத கால விலை திருத்தத்திற்கு பிறகு மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கும் என நிபுணர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் உலகின் முன்னணி வங்கி தங்கத்தின் விலை அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 80 சதவீதம் வரை உயரும் என தெரிவிக்கிறது.
ஜெர்மனியின் முன்னணி முதலீட்டு வங்கியான Deutsche Bank உலக அளவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை 8000 டாலர்கள் என்ற அளவை கடக்கும் என கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. இன்றைய தினம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4600 டாலர்களாக இருக்கிறது அதைவிட கிட்டத்தட்ட 80 சதவீதம் கூடுதலாக தங்கத்தின் விலை உயரும் என இந்த வங்கி கணிப்பு வெளியிட்டு இருக்கிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளின் வசம் இருக்கக்கூடிய தங்கத்தின் இருப்பு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும். அதாவது மத்திய வங்கிகள் இன்னும் அதிகமாக தங்கத்தை வாங்கி வைக்கும். இதனால் சந்தையில் டிமாண்ட் உருவாகி தங்கத்தின் விலை உயரும் என கூறுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளில் இருந்து தப்பிப்பதற்கு தங்கம் தான் ஒரே பாதுகாப்பு என வளரும் நாடுகள் புரிந்து கொண்டன. எனவே அவர்கள் அதிகமாக தங்கத்தை வாங்குவார்கள் என கூறுகிறது. 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு மத்திய வங்கிகள் 225 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை கூடுதலாக வாங்கி வைத்திருக்கின்றன எனக் கூறுகிறது.
பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வசம் இருக்கக்கூடிய அமெரிக்க டாலரின் இருப்பு 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைந்து இருக்கிறது. மத்திய வங்கிகள் அமெரிக்க டாலரை குறைத்து விட்டு அதிகமாக தங்கத்தை வாங்கி சேமிக்க தொடங்கி இருப்பதாக இந்த வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது. முன்பெல்லாம் சீனா, ரஷ்யா ,இந்தியா , துருக்கி போன்ற நாடுகளின் வங்கிகள் தான் அதிகமாக தங்கத்தை வாங்கும் ஆனால் தற்போது கசகஸ்தான், சவுதி, கத்தார் ஆகிய நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கின்றன என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
டாலருக்கு மாற்றான ஒரு ஆயுதமாக உலக நாடுகள் தங்கத்தை பயன்படுத்துவதற்கு தயாராகி வருகின்றன. எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலை உயரும் என கூறுகிறது. தற்போதுள்ள விலையிலிருந்து கிட்டதட்ட 80 சதவீதம் வரை தங்கத்தின் விலை உயரும் என்பதே இந்த வங்கி வெளியிடக்கூடிய கணிப்பு. அப்படி பார்க்கும்போது சென்னையில் இன்றைய தினம் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை தற்போதுள்ள விலையில் இருந்து 80 சதவீதம் உயர்கிறது என்றால் ஒரு கிராம் விலை 25,000 ரூபாய் என்ற அளவை எட்டும்.ஒரு கிராம் விலையே 25,000 ரூபாய் என்றால் ஒரு சவரன் தங்கத்தின் விலை 2 லட்சம் ரூபாய் என்ற உச்சபட்ச விலையை தொட வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

