இந்திய ரிசர்வ் வங்கி காலம் காலமாக விரைவான நிதி நிர்வாகம், முதலீடு, பணமாக்குதலுக்காகத் தனது தங்க இருப்பை உலக நாடுகளின் முக்கிய வர்த்தக சந்தையில் வைத்திருந்தது.
ஆனால் அமெரிக்க மற்றும் இதர மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் தங்க இருப்பை முடக்கிய காரணத்தால் வெளிநாடுகளில் இருக்கும் தங்கத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்குக் கொண்டு வருகிறது.

டன் கணக்கில் தங்கம் விமானம் மூலம் கொண்டு வரப்படும் காரணத்தால் மிகுந்த பாதுகாப்பு, அதேநேரத்தில் ரகசியமாகவும் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் புதன்கிழமை ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் 2027ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சுமார் 60.08 டன் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கியின் கஜானாவில் சேர்த்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் தங்க இருப்பின் அளவு இந்த 6 மாத காலகட்டத்தில் 680.05 டன்னில் இருந்து 740.13 டன்னாக உயர்ந்துள்ளது. மேலும் இந்த 60 டன் தங்கம் இந்தியாவுக்கு வந்த நிலையில் இந்திய அரசின் மொத்த தங்க இருப்பில் சுமார் 84.06 சதவீதம் உள்நாட்டில் உள்ளது.
இந்தியாவின் மொத்த தங்க இருப்பு 880.52 மெட்ரிக் டன் ஆகும். கடந்த நிதியாண்டின் 2ஆம் பாதியில் சுமார் 104 டன் தங்கம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவில் தங்க இருப்பின் மதிப்பு மார்ச் மாத இறுதியில் 115.40 பில்லியன் டாலராக இருந்த நிலையில், செப்டம்பர் மாத இறுதியில் தங்கம் விலையில் ஏற்பட்ட சரிவு காரணமாக 106.08 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
மேலும் இந்தியாவுக்கு சொந்தமான 140.39 டன் தங்கத்தை பேங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஃபார் இண்டர்நேஷ்னல் செட்டில்மென்ட்ஸ்-ன் பாதுகாப்பில் வைத்துள்ளது.
டாலர் மதிப்பின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடச் சீனா போல் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்து வரும் இந்திய அரசு விலை சரிவடையும் காலத்தில் தொடர்ந்து அதிகளவில் வாங்கி வருகிறது. ஆனால் இந்த 6 மாத காலத்தில் மொத்த தங்க இருப்பில் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை.
இன்று சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 0.30 சதவீதம் உயர்ந்து 3,599.87 டாலராக உள்ளது, காமெக்ஸ் சந்தையில் டிசம்பர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டர் விலை அதிரடியாக 1.53 சதவீதம் வரையில் உயர்ந்து 3,589.80 டாலராக உள்ளது.


Click it and Unblock the Notifications

