இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாம டிவிஎஸ் குழுமத்தில் சொத்து பிரச்சினை பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. தந்தை வேணு சீனிவாசனின் சொத்தில் சம பங்கினை பிரித்து தர வேண்டும் என கோரி மகள் லட்சுமி வேணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் தலைவர் வேணு சீனிவாசனுக்கு சுதர்சன் வேணு மற்றும் லட்சுமி வேணு என ஒரு மகனும் , மகளும் உள்ளனர். இவர்களில் மகள் லட்சுமி வேணு, தனது தந்த வேணு சீனிவாசன் தனக்கு சொந்தமான சொத்துக்களை முறைப்படி பிரித்து தர வேண்டும் என கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். முன்னதாக அவர் தனது தந்தைக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தற்போது அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு நவம்பர் 27ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மணி கண்ட்ரோல் தளம் வெளியிட்டுள்ள செய்தியில் சமரச பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில், நீதிமன்றத்தை அணுகுவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை என அவர் சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளது. தனது கொள்ளுத்தாத்தா மற்றும் தாத்தாவின் பாரம்பரிய சொத்துக்கள், தனது சகோதரருக்கு எந்த அளவுக்கு சொந்தமானதோ, அதே அளவுக்கு தனக்கும் சொந்தமானவை என லட்சுமி வேணு மனுவில் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த வழக்கில், கூட்டு குடும்ப சொத்துக்களை பிரித்து தருமாறும், தனக்குரிய நியாயமான பங்கை ஒதுக்குமாறும் லட்சுமி வேணு கோரியுள்ளார்.மேலும் பலமுறை கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் ஆவணங்கள் மற்றும் தகவல்களை பெறுவதற்கு, நீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டிய கட்டாயத்திற்கு லட்சுமி வேணு தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டிவிஎஸ் குடும்பத்தில் வேணு சீனிவாசன் குடும்ப பிரிவு, இந்தியாவின் மூன்றாவது பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தை கட்டுப்படுத்துகிறது. தற்போது இதனை வேணு சீனிவாசனின் மகன் சுதர்ஷன் வேணு தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
சுந்தரம்-கிளேட்டன் நிறுவனத்தின் பொறுப்பு லட்சுமி வேணுவிடம் உள்ளது. இருந்தாலும் நிறுவனத்தில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இல்லாமல் இவர் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. மேலும் 2025ஆம் ஆண்டு ஏப்ரலில் தனது சகோதரர் சுதர்ஷன் வேணுவை டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முக்கிய பலனளிக்கும் உரிமையாளராக சேர்க்க எடுத்த முடிவையும் லட்சுமி வேணு கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது லட்சுமி வேணு டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் , டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் ,சுந்தரம்-கிளேட்டன் ஆகிய நிறுவனங்களில் தனது தந்தைக்கு உள்ள பங்குகளை தனக்கும் தனது சகோதரருக்கும் சமமாக பிரிக்க வேண்டும் என கோருகிறார். மகனுக்கு அதிக உரிமை என்ற நிலைப்பாடு சட்டப்படி தவறானது என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதற்கிடையே குடும்ப சொத்துக்களில் லட்சுமி வேணுவுக்கு நியாயமான பங்கினை தர வேண்டும் என தாயார் மல்லிகா சீனிவாசன் , மகள் லட்சுமி வேணுவுக்கு ஆதரவாக நிற்கிறார். இந்த வழக்கு விசார்ணையில் நீதிமன்றம் என்ன முடிவெடுக்க போகிறது என்பது நவம்பர் 27ஆம் தேதி தெரிய வரும்.


Click it and Unblock the Notifications

