ஆன்லைனில் தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

ஆன்லைனில் தங்கம் வாங்கக்கூடிய வாய்ப்புகளைத் தேடுகிறீர்களா? நல்ல யோசனை தான். ஏனெனில், பெரும்பாலான பெரிய தங்க நகை விற்பனையாளர்கள் தற்போது ஆன்லைனிலும் நகைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும், அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் பேடிஎம் போன்ற இ-காமர்ஸ் தளங்களிலும் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இவைகள் பெரும்பாலும் தங்கக்கட்டிகள் மற்றும் தங்க நாணயங்கள் வடிவிலேயே தங்கத்தை விற்பனை செய்து வருகின்றன.

எது எப்படியோ, ஆன்லைனில் தங்கம் வாங்கும்போது சில விஷயங்களைக் கருத்தில் கொள்வது நலம்.

உங்கள் விற்பனையாளரைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் தங்கம் வாங்கப்போகும் விற்பனையாளர்/வெப்சைட்டின் நம்பகத்தன்மையைப் பற்றி நன்கு உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம். இன்டெர்நெட்டில் பெரும்பாலான பொருட்கள் சகாய விலையில் கிடைக்கும் என்பது பொது அபிப்ராயம் என்றாலும், இது தங்கத்திற்குப் பொருந்தாது. நம்பகமான வெசைட்களில் தங்கம் வாங்குவதே எப்போதும் பாதுகாப்பானது. குறைந்த விலையில் பொருட்களை விற்கக்கூடிய இ-பே போன்ற வெப்சைட்கள் தங்கம் வாங்குவதற்கு உகந்தவை அல்ல.

தங்கத்தின் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்

தங்கம் 24, 22, 18 மற்றும் 14 காரட் போன்ற பல வகைப்பாடுகளில் கிடைக்கின்றன. இவற்றுள் 24 கேரட் தங்கமே அதி சுத்தமான தங்கமாகும். ஆனால் 24 காரட்டில் தங்க ஆபரணங்கள் செய்யப்படுவதில்லை. ஏனெனில், இத்தங்கத்தில் செய்யப்படும் ஆபரணங்கள் எளிதில் முறிந்து விடும். இதைத் தவிர்ப்பதற்காக ஆபரணங்கள் செய்வதற்கு வெள்ளி, செம்பு, நிக்கல் போன்ற உலோகக்கலவைகளைத் தங்கத்துடன் சேர்ப்பர். எனவே, தங்கத்தின் சுத்தத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். நீங்கள் வாங்கும் தங்கத்தின் 'காரட்' (அல்லது 'கே') மதிப்பீட்டிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். 24 காரட்டில் தங்க நாணயங்கள் மற்றும் தங்கக்கட்டிகள் வாங்கலாம். இவை அமேஸான், ஃப்ளிப்கார்ட் மற்றும் பேடிஎம் போன்ற ஆன்லைன் வர்த்தகர்களிடம் கிடைக்கின்றன.

ஹால்மார்க் தரச்சான்றிதழ்

தங்கத்தை ஆன்லைனில் வாங்கும்போது ஹால்மார்க் தரச்சான்றிதழ் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் அதனைத் திறன்மதிப்பீடு செய்து கொள்ளலாம்.

பிஐஎஸ் (பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ்) என்ற அமைப்பினால் ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்ட தங்க நகை விற்பனையாளர்களிடம் மட்டுமே தங்கம் வாங்குங்கள். தங்க ஆபரணம்/நாணயம்/தங்கக்கட்டி போன்ற அனைத்திலும் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரையைக் காணலாம். பிஐஎஸ் தரச்சான்றிதழ் பெற்ற நகைகளை விற்கும் நகைக்கடைகளின் பட்டியல் பிஐஎஸ் வெப்சைட்டில் காணக் கிடைக்கிறது.

 

கணக்கீடுகளில் துல்லியமாக இருங்கள்

24 காரட்டில் செய்யப்படும் தங்க நாணயங்களில் முதலீடு செய்வது சிறந்தது என்பது பெரும்பாலானோரின் கருத்து. இது உண்மை தான் என்றாலும், அவற்றிற்கும் செய்கூலி உண்டென்பதையும், அக்கூலி விற்பனையாளர்களைப் பொறுத்து மாறுபடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தங்க ஆபரணங்களைப் பொறுத்தவரை, அனைத்திற்கும் செய்கூலி உண்டு. எனவே, அவற்றை வாங்கும்போது கணக்கீடுகளில் துல்லியமாக இருக்க வேண்டும். தங்கத்தின் எடை, செய்கூலி, அவற்றில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் மற்றும் இதர அலங்காரப் பொருட்களுக்கான விலை போன்றவற்றை ஆராய வேண்டும். உங்கள் விற்பனையாளர் தங்கத்தின் விலையையே கற்களுக்கும் நிர்ணயித்து விடாத வண்ணம் கவனமாக இருங்கள். ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன என்பதைப் பார்த்து, நீங்கள் வாங்கும் தங்கத்தின் மொத்த கிராம்களுக்கான விலை என்ன என்பதைக் கணக்கிடுங்கள். இவை அனைத்தும் உங்கள் பில்லில் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். தங்கத்தின் சுத்தம், அதன் நிகர எடை, தங்கத்தின் விலை, ஹால்மார்க் மற்றும் செய்கூலி போன்ற அனைத்தும் தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

 

ரிட்டர்ன் பாலிஸி

நீங்கள் வாங்கும் வெப்சைட் அல்லது வர்த்தகரின் ரிட்டர்ன் அல்லது பைபேக் பாலிஸியை கட்டாயமாக ஆய்வு செய்யுங்கள். இப்போதெல்லாம் பெரிய நகை விற்பனைக் கூடங்களும் தங்களுக்கென ஆன்லைன் கடைகளைத் திறந்துள்ளனர். அதில் ரிட்டர்ன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போன்ற சேவைகளையும் வழங்கி வருகின்றனர்.

எனினும், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்தவரை, ஆன்லைனில் விற்கப்படும் ஏனைய பொருட்களுக்குள்ளதைக் காட்டிலும் தங்கத்திற்கான விதிமுறைகள் மிகவும் கெடுபிடியானவை.
எனவே, தங்கத்தை ஆன்லைனில் வாங்க முடிவு செய்யும் முன் இந்த நிபந்தனைகளை நன்கு படித்துப் புரிந்து கொள்ள முயலுங்கள். இன்னும் சில வருடங்களுக்குப் பின், அப்போதைக்குப் புதியதான டிசைனில் வரக்கூடிய நகைகளை வாங்கும் பொருட்டு, நீங்கள் இதனை விற்க முற்பட்டால், அப்போது அதை என்ன விலைக்குத் திருப்பி எடுத்துக் கொள்வதாக அந்த ஆன்லைன் ஸ்டோர் உறுதியளிக்கிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

 

ரசீதைப் பெற்றுக்கொள்ளுங்கள்

எப்போதும் ரசீது வாங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு ரசீது வாங்குவது, ரிட்டர்ன் மற்றும் எக்ஸ்சேஞ்சின் போது மட்டுமல்லாது, உங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட சுத்தம் மற்றும் எடை போன்றவற்றில் எவ்வித தகிடுதத்தமும் செய்ய வழியின்றித் தங்கத்தை வாங்குவதற்கும் உதவுகிறது,.
ரசீது பெறுவதற்கு உங்கள் பான் கார்டு உள்ளிட்ட சில தகவல்களை நீங்கள் பகிர வேண்டியிருக்கலாம்; ஆனால், பில் பெற்றுக் கொள்வது உங்கள் பர்சேஸை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றும்.

முறையான பேக்கேஜிங்

ஆன்லைனில் வாங்கும்போது இது மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. நீங்கள் உங்கள் பொருளைப் பெற்றுக் கொள்ளும் போதே அதன் பேக்கேஜிங் சரியாக உள்ளதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். பேக்கேஜ் ஒழுங்காகச் சீல் செய்யப்பட்டிருக்கிறதா என்பதோடு அது எவ்வித சிதைவுக்கும் உள்ளாகாமல் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். பேக்கேஜிங்கைப் பற்றித் துளியளவு சந்தேகம் உங்களுக்குத் தோன்றினாலும், பொருளை வாங்கிக் கொள்ள மறுத்து விடுங்கள்.

மேலும், பொருட்களை வாங்கும் முன், ஷிப்மென்ட் கட்டணங்கள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். தங்கத்தை விற்பனை செய்து வரும் பெரும்பாலான ஆன்லைன் விற்பன்னர்கள் ஃப்ரீ ஷிப்பிங் சலுகை வழங்கி வந்தாலும் கடைசிக் கட்ட அவதியை தவிர்க்கும் பொருட்டு, முதலிலேயே இக்கட்டணங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது.

 

ரீசைஸ் மற்றும் ரிப்பேர்

நீங்கள் வாங்கியிருக்கும் தங்க ஆபரணங்கள் முறிந்தோ, பதிக்கப்பட்ட கற்கள் விழுந்தோ, பொலிவிழந்தோ போய் விடலாம்.

அது போன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் எங்கு அந்த ஆபரணத்தை வாங்கினீர்களோ அங்கேயே கொண்டு சென்று சரி செய்வதே சாலச் சிறந்தது. எனவே, தங்க ஆபரணங்களை ஆன்லைனில் வாங்கும் போது அக்குறிப்பிட்ட வெப்சைட்டின் ரீசைஸ் மற்றும் ரிப்பேர் பாலிஸியை ஆராய்ந்து அறிந்து கொள்ளத் தவறாதீர்கள்.

 

வீட்டில் போட்டுப் பார்த்து வாங்குவதற்கான வாய்ப்பு

காரட் லேன் மற்றும் ப்ளூஸ்டோன் போன்ற சில ஆன்லைன் தங்க நகைக் கடைகள் "வீட்டில் போட்டுப் பார்த்து வாங்குவதற்கான" வாய்ப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இச்சலுகை முற்றிலும் இலவசமே. ஒருவேளை நீங்கள் வாங்கும் பொருளைப் பற்றி உங்களுக்குச் சந்தேகம் இருக்குமானால் இது போல் "வீட்டில் போட்டுப் பார்த்து வாங்குவதே" சிறந்தது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Things you must not miss while buying gold online

Things you must not miss while buying gold online
Story first published: Wednesday, November 8, 2017, 17:17 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns