இன்றைய காலகட்டத்தில் தங்கம் என்பது நாளுக்கு நாள் அதன் மதிப்பு உயர்ந்து வரும், ஒரு விலையுயர்ந்த ஆபரணமாக உள்ளது. அதிலும் இந்தியாவை பொறுத்தவரையில் பாரம்பரிய ஆபரணமாகவும், சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
தங்கம் ஒரு விலைமதிப்பற்ற உலோகம் என்பதால், அதனை நாம் அடிக்கடி வாங்க முடியாது. ஆக அவற்றை வாங்கும்போது சுத்தமான தங்கமா? அதன் தரம் எப்படியுள்ளது. போலியான நகைகளை எப்படி அடையாளம் காண்பது? என பல விவரங்களையும் காணலாம் வாருங்கள்.
தங்க நகைகள் பொதுவாக 22 கேரட்டால் செய்யப்படுகின்றன. சில இடங்களில் 18 கேரட், 14 கேரட் என்ற அளவில் கூட உள்ளது. ஆக நாம் அவற்றை வாங்கும்போது பரிசோதித்து வாங்குவது நல்லது.

பிரச்சனையாகலாம்
இந்தியர்கள் தங்களது பாரம்பரியம், அந்தஸ்து என தங்களது உணர்வுகளுடன் கலந்துள்ள தங்கத்தினை, விருப்பமான ஆபரணமாக அணிகின்றனர். ஆனால் பலரும் தங்கத்தின் மீது உள்ள ஆர்வத்தினால் ஏதோ ஒரு கடைக்கு சென்று வாங்கி வந்து விடுகின்றனர். அதன் தரம் பற்றி பார்ப்பதில்லை. ஆனால் பின்னாளில் அதனை நீங்கள் மாற்றும்போதோ அல்லது விற்கும் போது அது உங்களுக்கு பிரச்சனையாக மாறக்கூடும்.

எது சுத்தமான & போலியான தங்கம்?
சர்வதேச தரத்தின் கீழ், தங்கம் 41.7% அல்லது 10 காரட்டுகளுக்கும் குறைவானது, போலியான தங்கமாக கருதப்படுகிறது. தங்க நகையை சுத்தமான நகையா என்பது பார்ப்பது கடினம் என்றாலும், சில விஷயங்களை கருத்தில் கொண்டு பார்க்கும்போது ஒரளவுக்கு தெரிந்து கொள்ள முடியும். எப்படி இருப்பினும் நீங்கள் தங்கம் வாங்கும்போது பில் போட்டு வாங்குகள். ஏனெனில் பின்னாளில் ஏதேனும் பிரச்சனை என்றாலும் கூட, நாம் கடையை அணுக முடியும். அல்லது தக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

சுத்தமான தூய தங்கமா?
உங்களது தங்கம் தூய தங்கமாக இல்லாவிட்டால், வலுவான காந்த துண்டினை அருகில் வைத்தால் அவை ஈர்க்கப்படுகின்றன. அதில் ஈர்க்கப்பட்டால், அது கலப்படம் உள்ளதை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த சோதனை மிக எளிதானதும் கூட. உங்களது தங்க நகைகள் துருப்பிடிப்பதைப் போல் இருந்தால், காந்தத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் தங்கம் எப்போதும் துருப்பிடிக்காது.

ஹால்மார்க் முத்திரை இருக்கா?
நகை வாங்கும் போது BIS ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பாருங்கள். ஏனெனில் இந்த முத்திரைகள் தரக்குறியீட்டு நிறுவனங்களால் சோதிக்கப்பட்டதென்றும், தரக்குறியீடு அளிக்கப்பட்டதென்றும் அங்கீகரிக்கிறது. நகைகளில் BIS என்ற குறியீடு முக்கோண வடிவில் இருக்க வேண்டும். எவ்வளவு சுத்தமான தங்கம் என்ற அளவு இருக்க வேண்டும்.

மிதவை டெஸ்ட்
தங்கம் என்பது ஓரு தடிமனான, கடிமனான உலோகம். ஆக உங்களது தங்க நகைகளை ஒரு வாளியில் தண்ணீர் விட்டு அதில் போட்டு பார்க்கலாம். அது உண்மையான தங்கம் என்றால், அது மூழ்கிவிடும். ஆனால் இதன் மூலம் முழுமையாக அறிய முடியாது. ஆக எப்போதும் தங்கத்தினை வாங்கும்போது அதற்கு ஆதாரமாக பில் வாங்க வேண்டும். முடிந்த மட்டும் சிறிய கடைகளில் வாங்குவதை தவிர்க்கலாம். அப்படியே சிறிய கடையாக இருந்தாலும், பில் போட்டு வாங்க வேண்டும். இல்லையெனில் போலி தங்கத்தினை உங்களிடம் விற்க முற்படலாம்.

ஆசிட் டெஸ்ட் செய்யலாமா?
உண்மையான தங்கம் என்பது நைட்ரிக் அமிலத்துடன் விணைபுரிவதில்லை. ஆனால் காப்பர், ஜிங்க், ஸ்டெர்ல்லிங் வெள்ளி உள்ளிட்ட உலோகங்களுடன் வினைபுரிகிறது. ஆனால் இந்த சோதனையில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதனை காற்றோட்டமான அறையில் கையுறைகள் மற்றும் முகமூடிகள் போன்றவற்றை பயன்படுத்தி சோதனை செய்ய வேண்டும். தங்கத்தின் மேற்பரப்பினை லேசாக உரசி, அதனை ஒரு பொட்டு அமிலத்தின் மீது வைத்தால் நிறம் மாறாது, அப்படியென்றால் அது தூய தங்கம். அது நிறம் மாறினால் அதில் மற்ற உலோகங்கள் கலந்துள்ளது என தெரிந்து கொள்ளலாம்.
சுத்தமான தங்கத்தில் நகை செய்ய முடியாது என்பதால், தங்கத்தில் ஏதேனும் உலோகத்தினை கலப்பார்கள். குறிப்பாக வெள்ளி அல்லது காப்பர் போன்றவற்றை கலப்பார்கள். அப்போது தான் அதனை நகையாக செய்ய முடியும். ஆக இந்த கலப்படத்தை பொறுத்து தான் 22 கேரட்., 18 கேரட் என பிரிக்கிறார்கள்.

வினிகரில் டெஸ்ட் செய்யலாம்?
மற்றொரு எளிதான செயல்முறை வினிகரை வைத்து செய்யலாம். இது நாம் அடிக்கடி நம் கிச்சனில் பயன்படுத்தும் ஒரு பொருள் தான். உங்களது தங்கத்தின் ஒரு சிறு பகுதியில் வினிகரை ஒரு சில துளிகள் விடலாம். அப்போது உங்கள் தங்கத்தின் நிறம் மாறினால் அது உண்மையான தங்கம் அல்ல. அல்லது தூய தங்கம் என்றால் அதன் நிறம் மாறாது.

உங்கள் தங்கத்தின் தரம்
999 - 24 கேரட் தங்கம் என்பது சுத்தமான தங்கம். இதில் தங்க ஆபரணங்களை செய்ய முடியாது. இதே 916 - 22 - 22 கேரட்- இதில் தங்க ஆபரணங்களை செய்ய முடியும். இது எப்போதாவது பயன்படுத்துகிறோம் எனில் இதனை ஆபரணமாக வாங்கலாம். இல்லை எனில் 18 கேரட் வாங்கலாம். இதில் 75% தங்கமும், 25% மற்ற உலோகங்களும் கலந்திருக்கும். இதெல்லாவற்றையும் மீறி உங்களுக்கு சந்தேகம் வந்தால், அதனை சரியான அப்ரைசரிடம் கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

இதனையும் பார்த்து வாங்கலாம்
பொதுவாக தங்க நகை வாங்கும்போது உங்களுக்கு தரப்படும் பில்லினை சரி பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் அதனையும் கூட போலியாக தரலாம். அந்த பில்லில் கல், தங்கம் என அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா? செய்கூலி, சேதாரம் எவ்வளவு என கவனிக்க வேண்டும். ஏனெனில் வைரங்கள் மற்றும் மரகதங்களைப் போன்ற விலையுயர்ந்த கற்கள் பெரும்பாலும் தங்க நகைகளில் சேர்க்கப்படுகின்றன, இதனால் அவை அதிக எடையை காட்டும். எனவே நீங்கள் கற்கள் உள்ள நகைகளை வாங்கும் போது, அவற்றை நீக்கினால் எவ்வளவு எடை வருமோ அதற்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும். இதனை நாம் அனைவருமே அறிவோம். ஆனால் தங்கம் வாங்கும்போது கவனிக்க தவறி விடுகிறோம். ஆக இனி தங்கம் வாங்கும்போது இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள்.