உலகளவில் தங்கம் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் தற்போது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தங்கம் முக்கிய முதலீடாக மாறியுள்ளது. இதேவேளையில் தங்கம் விலை தொடர்ந்து உயருமா, குறையுமா என்ற அச்சமும் நிலவுகிறது.
கொரோனா தடுப்பூசி வந்த பின்பு தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்து பங்குச்சந்தை முதலீடுகள் அதிகளவில் குறையும் கருத்து நிலவி வந்த நிலையில், தற்போது பங்குச்சந்தையில் சிறப்பான வர்த்தகத்தை அடைந்து வருகிறது.
குறிப்பாக இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகளின் அளவு வெறும் 9 நாள் வர்த்தகத்தில் 2.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் தங்கம் விலை உயருமா..? குறையுமா..? என்பதைச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் தங்கம் விலை
பொதுவாக இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச சந்தை விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு அடிப்படையில் தான் இருக்கும். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரத்தை தெரிந்துகொண்டால் மட்டுமே இந்தியாவில் இதன் விலையைக் கணிக்க முடியும்.

வெள்ளிக்கிழமை வர்த்தகம்
வெள்ளிக்கிழமை சர்வதேச தங்கம் வர்த்தகச் சந்தையில் தங்கம் விலை கணிசமான அளவிற்குச் சரிவைச் சந்தித்தாலும், வர்த்தக முடிவில் அதிகப்படியான வளர்ச்சியைக் கண்டு ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,839 டாலர் வரையில் உயர்ந்து காணப்படுகிறது. இந்தத் தடாலடி உயர்வின் மூலம் கடந்த 3 நாட்களாகத் தங்கம் விலையில் ஏற்பட்ட சரிவு ஈடுசெய்யப்பட்டு உள்ளது.

முதலீட்டாளர்களின் முதலீட்டுப் பழக்கம்
இது பொதுவாக முதலீட்டாளர்கள் மத்தியில், விலை குறையும் போது அதிகளவில் முதலீடு செய்யும் பழக்கம் இருக்கும். இதன் காரணமாக 3 நாட்களாகத் தங்கம் விலை சரிந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்கச் சந்தை வர்த்தகம் துவங்கிய பின்பு அதிகளவிலான முதலீடுகள் புல்லியன் சந்தையில் குவிந்துள்ளது. இதனால் வாயிலாகவே தற்போது தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.

50 நாட்கள்
இதன் படி தற்போது சந்தை வர்த்தகச் சூழ்நிலையைக் கணிக்கும் போது தங்கம் விலை அதிகளவிலான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், அடுத்த நாட்களில் 50 நாட்கள் சராசரி விலையை விடவும் அதிகளவில் உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தங்கம் விலை 1900 டாலர் வரை உயரலாம்
இந்தக் கணிப்பில் தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1870 டாலரை அடையும் போது கணிசமான சரிவு ஏற்பட்டு அடுத்த சில வாரத்தில் தங்கம் விலை 1900 டாலர் கண்டிப்பாக அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்கப் பொருளாதார ஊக்கத் திட்டம்
மேலும் அமெரிக்காவில் பொருளாதார ஊக்கத்திற்கு அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டம் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவைகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் படிப்படியாக ஒப்புதல் கிடைத்து வரும் நிலையில், அமெரிக்காவில் பணப்புழக்கம் பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தங்கம் விலை 1950 டாலரையும் தொட வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்க டாலர் Vs இந்திய ரூபாய்
இதே வேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு மாத காலத்தில் தொடர் சரிவை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் 12ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.89 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 73.74 ரூபாயாக உள்ளது.

டாலர் மதிப்பில் சரிவு
இந்நிலையில் அமெரிக்க டாலரின் மதிப்பு அமெரிக்காவின் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் மற்றும் நிதி உட்செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வரும் போது டாலர் மதிப்பு அதிகளவில் குறையும். ஏற்கனவே அமெரிக்க அரசு கொரோனா தடுப்பு மருந்து வந்த பின்பும், ஊக்குவிப்புத் திட்டம் அமலாக்கம் செய்யப்பட்ட பின்பும் அமெரிக்க டாலரின் மதிப்பு பெரிய அளவில் குறையும் எனக் கணித்துள்ளது.

அமெரிக்க நாணய சந்தை
இதன் அமெரிக்க நாணய சந்தை நிபுணர்களின் கணிப்பின் படி அமெரிக்க டாலர் 2021ல் அதிகப்படியாக 20 சதவீதம் வரையில் குறையலாம் எனக் கணித்துள்ளனர். அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகப்படியாக 60 ரூபாய் வரையில் சரிய வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் தங்கம் விலை
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் தங்கம் விலை, சர்வதேச சந்தை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும் காரணத்தால், தங்கம் விலை உயரும் அதே வேளையில் டாலர் மதிப்பும் குறைவதால் இந்தியச் சந்தையில் தற்போது இருக்கும் விலை நிலவரத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது எனவும் கணிப்புகள் நிலவுகிறது.

தங்கம் விலை புதிய வரலாற்று உச்சம்
இதேபோல் இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் குறைந்து, உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தால் தங்கம் விலை புதிய வரலாற்று உச்சத்தை அடையும் எனவும் கருத்து நிலவுகிறது. இதற்கு ஏற்றார் போல் இந்தியாவில் நிதி பற்றாக்குறை அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

MCX சந்தை நிலவரம்
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் MCX சந்தையில் பிப்ரவரி மாத ஆர்டர் விலை 0.43 சதவீதம் உயர்ந்து 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 49,290 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையைப் போலவே வர்த்தகத் துவக்கத்தில் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வர்த்தக முடிவில் அதிகளவிலான உயர்வைக் கண்டது.