இந்தியாவிலும், சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை தொடர்ந்து தடுமாற்றம் அடைந்து வரும் காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகப்படியான குழப்பத்தில் உள்ளனர்.
இன்று காலை எம்சிஎக்ஸ் சந்தையில் அதிரடியாக விலை உயர்ந்த தங்கம் விலை, மாலை நேரத்தில் சரிவடைந்தது. இதனால் பெரும் முதலீட்டாளர்கள் தங்கம் முதலீடு செய்வதில் இருந்து விலகியுள்ளனர்.

சர்வதேச சந்தை விலை
இந்நிலையில் இன்று சர்வதேச சந்தை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலையில் வர்த்தகம் துவங்கும் போது 1732 டாலரில் இருந்து 1737 டாலர் வரையில் உயர்ந்து. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் மாலை வர்த்தகத்தில் மளமளவெனச் சரிந்து ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,724 டாலர் வரையில் குறைந்துள்ளது.

தங்கம் விலை
இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் காலை வர்த்தகத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் மதிய நேர வர்த்தக்தில் சரியத் துவங்கியது. இதன் மூலம் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை மாலை நேரத்தில் 0.19 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் 10 கிராம் தங்கத்தின் விலை 45,027 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

வெள்ளி விலை
மேலும் வெள்ளியின் விலையும் இன்று சரிவைச் சந்தித்துள்ளதால் ரீடைல் வர்த்தகம் மேம்பட்டு உள்ளது. இன்று மாலை வர்த்தகத்தில் MCX சந்தை வர்த்தகத்தில் ஒகு கிலோ வெள்ளியின் விலை 0.58 சதவீதம் சரிந்து 64,430 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

அதிகளவிலான தடுமாற்றம்
வாரத்தின் முதல் நாள் வர்த்தக நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு அதிகளவிலான தடுமாற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக இன்று மதிய நேர வர்த்தகத்தில் அதிகளவிலான தடுமாற்றம் அடைந்துள்ளது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

மந்தமான முதலீட்டுச் சூழ்நிலை
பங்குச்சந்தை இன்று விடுமுறையாக இருக்கும் நிலையிலும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடுகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம் சர்வதேசச் சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்டு உள்ள சரிவு தான்.

டாலர் மதிப்பு
இதேபோல் இன்று நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.42 ரூபாயில் இருந்து 72.69 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. நாணய மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தின் காரணமாக ரீடைல் விற்பனை சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.