ஆர்பிஐ தங்க பத்திர விற்பனையானது இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த முதலீட்டு திட்டமானது தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு, ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகவே பார்க்கப்படுகிறது.
12ம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திரத்தினை வாங்க கடைசி தேதி மார்ச் 5, 2021 ஆகும். அதன் பிறகு மார்ச் 9, 2021 இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது,
இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினை பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்லைனில் எப்படி வாங்குவது?
ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம் சரி? ஆனால் எப்படி வாங்குவது? என பலருக்கும் தெரிவதில்லை. சரி வாருங்கள் பார்க்கலாம். முதலில் இதற்காக உங்களது எஸ்பிஐ இணைய வங்கியை லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் eServicess என்பதை கிளிக் செய்து, அங்கு Sovereign Gold Bond என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு terms and conditions என்பதை கிளிக் செய்து, proceed கொடுக்கவும்.

என்னென்ன விவரங்கள் கொடுக்க வேண்டும்?
இதன் பிறகு registration form-மினை பதிவு செய்யவும். இது ஒரு முறை பதிவு தான். பார்மினை பதிவு செய்த பிறகு Submit கொடுக்கவும். அதற்கு முன்பு எவ்வளவு கிராம் வாங்க போகிறீர்கள், உங்களது நாமினி விவரங்கள் உள்ளிட்ட பலவற்றையும் கொடுக்க வேண்டும். இதன் பிறகே சப்மிட் செய்யவும்.

எவ்வளவு வாங்கலாம்?
இது அரசு பத்திரம் என்பதால் இறையாண்மை தன்மை கொண்டவையாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது. ஆக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் நேரடியாக இந்த பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பத்திரங்களை பொதுவாக ஒருவர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கடன் வாங்கிக் கொள்ளலாம்
இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவெனில், வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.