இந்தியாவின் மிகப் பெரிய பண்டிகைகளான நவராத்திரி, தசரா, தீபாவளி எல்லாம் வரிசை கட்டி வர இருக்கின்றன. இந்தியாவில் பொதுவாகவே பண்டிகை காலங்களில், நகை விற்பனை அதிகரிக்கும்.
இந்த பண்டிகை கால டிமாண்டை எதிர்பார்த்து, தங்க நகைக் கடை உரிமையாளர்கள், தங்கத்தை அதிக விலை கொடுத்து, வாங்கி வைக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் இருந்து, தங்க டீலர்கள், ஒரு அவுன்ஸ் தங்கத்தை தள்ளுபடியில் தான் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

கூடுதல் விலையில் தங்கம்
அவ்வளவு ஏன்? கடந்த வாரத்தில், ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு சுமாராக 6 டாலர் தள்ளுபடி கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, அதே தங்க டீலர்கள், இந்த வாரத்தில், ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு சுமாராக 2 டாலர் கூடுதலாக வைத்து விற்றுக் கொண்டு இருக்கிறார்களாம். இப்படி ஒரு பக்கம் தங்க டீலர்கள் விலை ஏற்றிக் கொண்டு இருக்கும் போது, மறு பக்கம் தங்கம் விலை சரியத் தொடங்கி இருக்கிறது.

இன்றைய தங்கம் விலை - 24 கேரட் 10 கிராம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி வீற்று இருக்கும் சிங்காரச் சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 53,090 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். நேற்று விற்பனை ஆன விலையை விட 220 ரூபாய் சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பவுன் தங்கம் விலை 42,472 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இன்றைய தங்கம் விலை - 22 கேரட் 10 கிராம்
அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,650 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். நேற்றைய விலையை விட 220 ரூபாய் சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பவுன் தங்கம் விலை 38,920 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

MCX Gold - டிசம்பர் ஃப்யூச்சர் விலை
இந்தியாவின் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸ் சந்தையில், டிசம்பர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்றைய குளோசிங் விலையான 51,107 ரூபாயில் இருந்து 321 ரூபாய் (0.62 %) சரிந்து 50,786 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

திடீர் சரிவில் தங்கம் விலை
கடந்த 7 அக்டோபர் 2020 அன்று 49,880 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருந்த, எம் சி எக்ஸ் தங்கம் விலை, நேற்று 51,107 ரூபாய் வரை ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று 321 ரூபாய் விலை இறக்கம் கண்டு 50,786 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

இண்டர்நேஷனல் தங்கம் விலை
ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் (XAU USD CUR) விலை, நேற்று 1,922 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று (13 அக்டோபர் 2020, செவ்வாய்க்கிழமை) 8 டாலர் (0.33 %) விலை இறக்கம் கண்டு 1,914 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

தொடரும் விலை சரிவு
கடந்த 9 அக்டோபர் 2020 அன்று, சர்வதேச தங்கம் விலை 1,930 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. 21 செப் 2020-க்குப் பிறகு, சர்வதேச தங்கம் விலை 1,930 டாலரில் வர்த்தகம் நிறைவடைவது இதுவே முதல் முறை. அந்த ஏற்றத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல், நேற்று (12 அக் 2020) 1,922 டாலரில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 1,914 டாலரில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சர்வதேச தங்கம்.

ஸ்டிமுலஸ் பேக்கேஜ்
இன்னும் சில வாரங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் வர இருக்கிறது. இந்த குறுகிய கால கட்டத்துக்குள், ஸ்டிமுலஸ் பேக்கேஜ் விவகாரத்தில் இரு தரப்புமே ஒரு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. எனவே, ஸ்டிமுலஸ் பேக்கேஜ் அதிபர் தேர்தலுக்கு முன் வராமலும் போகலாம் என்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ்.

பெரிய ஊக்கத் தொகை அறிவிக்கப்படலாம்
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்த பின் ஸ்டிமுலஸ் பேக்கேஜ் கொண்டு வருவது எளிதாக இருக்கும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதோடு, ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால், தற்போது பேசப்பட்டு வரும் தொகையை விட பெரிய தொகை அறிவிக்கப்படலாம் எனவும் லைவ் மிண்ட் சொல்கிறது.

தங்கம் விலை தடுமாறலாம்
அமெரிக்காவின் ஸ்டிமுலஸ் பேக்கேஜ் அறிவிக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் ஒரு பக்கம் இருக்க, அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் கொஞ்சம் வலுவடைந்து இருக்கிறது. இந்த இரண்டு காரணிகளால், தங்கம் விலை தடுமாற்றத்துடனேயே வர்த்தகமாகலாம் எனச் சொல்லி இருக்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ். தங்கம் விலை தடுமாற்றத்துடன் இருக்கும் போது என்ன செய்யலாம்?

இப்ப தங்கம் வாங்கலாமா?
எதிர்காலத்தில் தங்கம் விலை நல்ல ஏற்றம் காணும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே, தற்போது தங்கம் விலை தடுமாற்றத்துடன் வர்த்தகமாகும் போது, எப்போது எல்லாம் தங்கம் விலை குறைகிறதோ, அப்போது எல்லாம் தங்கத்தை வாங்குங்கள் அல்லது முதலீடு செய்யுங்கள். ஒரு கணிசமான விலை ஏற்றம் கண்ட பின், தங்கத்தை விற்று லாபம் பார்க்கலாம்.