பங்குச்சந்தையில் சொல்லியடிக்கும் கில்லியாக வேண்டுமா..? இதை படிங்க..?

Subscribe to GoodReturns Tamil

பங்கு வர்த்தகம் என்பது சாகசங்கள் நிறைந்த தொழில் விளையாட்டு. இதில் சாதிக்க வேண்டும் என்றால், பொறுமையும் அதிரடியாய் முடிவெடுக்கும் துணிச்சலும் தேவை. பங்கு வர்த்தகத்தில் வெற்றி பெறவேண்டுமென்றால் தனிப்பட்ட திறன்கள் எதுவும் தேவையில்லை. பங்குவர்த்தகம் தொடர்பான விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் எப்பொழுதும் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தாலே போதும். பங்குச்சந்தையில் நம்முடைய வெற்றிக்கொடியைப் பறக்கவிட வேண்டும் என்றால், பங்கு வர்த்தகம் தொடர்பான அடிப்படை விதிகளை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும். நம்மை, வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் விதிமுறைகள் என்னவென்று பார்ப்போம்.

ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த வணிகத் திட்டத்திலிருந்து எந்தச் சமயத்திலும் விலகிச் செல்லக்கூடாது. நமக்கு என்று ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்ட பிறகு அதனை முழுமனதோடு செயல்படுத்த வேண்டும்.

நெளிவு சுழிவு

பங்குச் சந்தையில் உள்ள நெளிவு சுழிவுகளை ஒரு குழந்தையின் குதூகலத்தோடும் ஒரு மாணவனுக்கு உரிய ஆர்வத்தோடும் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும் சந்தை நிலவரங்களைக் கவனித்துக் கொண்டு அதற்கேற்ப நம்முடைய வணிகத் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

இழப்புகளை எப்படித் தவிர்ப்பது?

சரியான நேரத்தில் பங்கு வர்த்தகத்தை விட்டு வெளியேறத் தெரிந்துவிட்டால் தேவையற்ற இழப்புகளைத் தவிர்க்கலாம். இலாபத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதைப்போல எதிர்பாராது நிகழும் இழப்புகளைச் சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும். இழப்பு ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வருவதற்கு முன்கூடியே திட்டமிடல் வேண்டும்.

இலக்கு

ஒரு குறிப்பிட்ட அளவிலான விலையை இலக்காக வைத்துக் கொண்டு, அதை நோக்கியே செயல்படுவது புத்திசாலித்தனமல்ல. நாம் நினைத்தது போன்று விலையை அடைந்தவுடன் உடனடியாக வணிகத்தை விட்டு வெளியேறுவதும் நல்லதல்ல. இலாபம் என்னும் பட்டத்தை அதன் போக்கில் பறக்கவிடுங்கள், எவ்வளவு உயரமாகச் செல்லுமோ அதுவரை செல்லட்டும்.

கவனம்

எல்லா வகையான வணிக நுட்பங்களின் மீதும் கோட்பாடுகளின் மீதும் பரவலாகக் கவனம் செலுத்துவதைவிட ஏதாவது ஒரு வணிகயுக்தியை ஆழமாகக் கற்றுத் தேர்ந்து அதன் வழி நடக்க வேண்டும். அதன்பிறகு வேறுவகையான வணிக நுட்பத்தைக் கற்றுத் தெளிய வேண்டும். வணிக யுக்திகள் ஒவ்வொன்றிலும் உள்ள சாதகம் மற்றும் பாதகங்களைப் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய வேண்டும். அதன் பிறகுதான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஒத்தையா..? ரெட்டையா…?

பங்கு வணிகம் குறித்த நுட்பமான ஏற்ற இறக்கக் குறியீடுகளை அலசி ஆராயவேண்டும். ஒத்தையா..? ரெட்டையா...? போட்டுப் பார்த்தோ அல்லது அன்றைய ராசி பலன்களை அடிப்படையாகக் கொண்டோ வணிகத்தில் வெற்றிபெற முடியாது. பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கங்களைக் கணித்துச் சொல்லும் இன்டிகேட்டர்களை அடிப்படையாகக் கொண்டுதான் நம்முடைய ஒவ்வொரு வணிக நடவடிக்கையும் அமைய வேண்டும்.

வாய்ப்புகள்

நாம் சிறப்பாகச் செயலாற்றும்போது வாய்ப்புகள் வந்து குவியும். செயலற்று இருந்தோமானால் வருத்தங்கள் மட்டுமே மிஞ்சும். பங்கு வர்த்தகத்தில் இலாபம் ஈட்டுவதற்கு வானமே எல்லை. வானத்தை எட்டிப் பிடிக்கக் கடினமான உழைப்பும் விழிப்புணர்வும் தேவை. நம்முடைய அறியாமையும், வணிகத்தைச் சரியாகக் கணிக்கத் தவறும் போக்கும்தான் பங்குவர்த்தகத்தில் நமக்கு ஏற்படும் இழப்புகளுக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

பரிசோதிப்பு

வணிகம் தொடர்பான விதிகளையும் கோட்பாடுகளையும் வெறுமனே ஆராய்வதைக் காட்டிலும் அவற்றைப் பரிசோதித்துப் பார்க்கவேண்டும். வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன்னால் சந்தை நிலவரத்தை நன்கு ஆராய வேண்டும். வணிக நுட்பங்களைப் பரிசோதித்துப் பார்க்காமல் வெறும் ஆராய்ச்சியோடு நிறுத்துவதால் எந்தப் பயனும் இல்லை. நமக்குக் கிடைத்த வணிக நுட்பத்தைக் கொண்டு, முதலில் குறைந்த அளவிலான தொகையுடன் பங்குவர்த்தகத்தில் ஈடுபடவேண்டும். அனுபவம் பெருகுவதற்கு ஏற்ப முதலீட்டையும் விரிவுபடுத்த வேண்டும்.

இணைய உலகம்

இணையம் வழியாகவே பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் யுகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் முழுவதும் கணினிமயமாகிவிட்டது. பங்கு வணிகத்தில் ஈடுபடுவோர், எப்பொழுதும் கணிப்பொறித் திரையின் மீதே கண்ணையும் கவனத்தையும் குவித்து வைக்காமல், அவ்வப்போது ரிலாக்சாக எழுந்து நமக்கு மகிழ்ச்சி தரும் பிற விசயங்களின் மீதும் கவனத்தைச் செலுத்த வேண்டும். நம்முடைய உள்ளமும் உடம்பும் உற்சாகத்தோடும் ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் பங்கு வர்த்தகத்தில் கில்லியாய் சொல்லி அடிக்க முடியும்.

எதிர்பார்ப்புகள்

வணிகத்தில் நாம் அடையவேண்டிய இலக்குகளைச் சற்று உயர்வாகவே அமைத்துக் கொள்ளுங்கள். அதேவேளையில், அடையமுடியாத அளவுக்கு எதிர்பார்ப்புகளைத் தாறுமாறாக எகிறவைத்துக் கடைசியில் ஏமாந்து போகக் கூடாது. நம்முடைய கனவுகள், நடைமுறைக்கு உகந்த வகையிலும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ற வகையிலும் இருந்தால் அது விரைவில் கைகூடும், இல்லையென்றால் அது கடைசிவரை கற்பனையாகவே அமைந்துவிடும். தேவைப்பட்டால் பங்குவணிக ஆலோசகர்களிடம் கலந்தாலோசிப்பது நம்முடைய பணத்துக்குப் பாதுகாப்பாகவும் மனதுக்குத் தெம்பாகவும் இருக்கும்.

பங்கு சந்தை

பங்குச் சந்தைகள் எப்பொழுதும் சரியான பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கும். ஆனால் நமக்கு வழங்கப்படுகின்ற ஆலோசனைகள் சிலநேரம் நம்மைத் தவறாக வழிநடத்திவிடும். எனவே, உங்களுக்கு வழங்கப்படுகின்ற ஆலோசனைகள் உங்களுடைய தனித்திறனையும் வணிகமுன்னோக்கு யுக்தியையும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

வெற்றி நிரந்தரமல்ல

குறிப்பிட்ட வகையான வணிக யுக்திகளும், நடைமுறை விதிகளும் உங்களுக்கு எப்பொழுதுமே 100% வெற்றியைத் தேடித்தரும் என்று சொல்லமுடியாது. வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன்னால் அனைத்து வகையான வாய்ப்புகளையும் உற்று நோக்கவேண்டும், இலாபத்தைச் சாத்தியமாக்கக் கூடிய அனைத்து வழிமுறைகள் குறித்தும் யோசிக்க வேண்டும்.

பரந்த வானம்

பங்கு வர்த்தக விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் தவறாது பின்பற்றவேண்டும். பங்கு வணிகம் தொடர்பான தேடலைத் தொடருங்கள், காண்பனவற்றிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், கற்றுக் கொண்டதைப் பரிசோதித்து நடைமுறைப்படுத்துங்கள். பங்கு வர்த்தகமும் இந்தப் பரந்த வானமும் உங்கள் வசப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Share Market for Beginners

Share Market for Beginners
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns