பொதுவாக பொதுப் பங்கு வெளியீடு (IPO) என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு என்பார்கள். அந்த வகையில் வரவிருக்கும் நாட்களில் வரவிருக்கும் 3 பங்கு வெளியீடுகளை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
என்னென்ன நிறுவனங்கள் ஐபிஓ-வில் பங்குகளை வெளியிடப் போகின்றன? எந்தெந்த தேதிகளில் வெளியிடுகின்றன. என்ன விலை? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ப்ரூடென்ட் கார்ப்பரேட் அட்வைசரி சர்வீசஸ் ((Prudent Corporate Advisory Services), டெல்லிவரி லிமிடெட் (Delhivery Limited) மற்றும் வீனஸ் பைப்ஸ் அன்ட் டியூப்ஸ் (Venus Pipes and Tubes) உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளன. இதன் மூலம் சுமார் 6,000 கோடியை திரட்டவுள்ளன.
ரிலையன்ஸ் காலாண்டு முடிவு எப்படியிருக்கும்.. எதிர்பார்ப்புக்கு மத்தியில் பங்கு விலை 1% மேலாக சரிவு!

ப்ரூடென்ட் கார்ப்பரேட் அட்வைசரி
ப்ரூடென்ட் கார்ப்பரேட் அட்வைசரி சர்வீசஸ் மே 10ம் தேதி அதன் பொது பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் பங்கு வெளியீட்டு விலையாக 595 ரூபாய் முதல் 630 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளது. இது மே 12ம் தேதி முடிவடைகிறது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் சுமார் 539 கோடி ரூபாய் முதலீட்டினை திரட்ட திட்டமிட்டுள்ளது.

AUM எவ்வளவு?
ப்ரூடென்ட் கார்ப்பரேட் அட்வைசரி சர்வீசஸ் ஒரு வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனமாகும். இது டிசம்பர் 31,2021 நிலவரப்படி, இதன் AUM 48,411.47 கோடி ரூபாய் ஆகும். இதன் மொத்த AUM- ல் 92.14% பங்கு சார்ந்ததாக உள்ளது.

டெல்லிவரி லிமிடெட்
டெல்லிவரி லிமிடெட் நிறுவனம் மே 11 - 13 முதல் ஐபிஓ-வுக்கு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஓ -வில் 462 - 487 ரூபாயாக விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்த நிறுவனம் 2021 நிதியாண்டில் இருந்து இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் லாகிஸ்டிக்ஸ் நிறுவனமாகும். தற்போதைய நிலவரப்படி 23,113 ஆக்டிவ் வாடிக்கையாளார்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனம் சுமார் 5235 கோடி ரூபாய் நிதியினை திரட்ட இலக்கு வைத்துள்ளது.

வீனஸ் பைப்ஸ் அன்ட் டியூப்ஸ்
வீனஸ் பைப்ஸ் அன்ட் டியூப்ஸ் மே 11 - 13ல் ஐபிஓ -வினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 165 கோடி ரூபாய் நிதியினை திரட்டவுள்ளது. இந்த ஐபிஓ-வில் விலை 310 - 326 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.