கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல்வாதிகள் திராவிட மாடல் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியாவின் அனைத்து நகரங்களையும் திருப்பூர் மாடலாக மாற்ற முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் ஏற்றுமதியாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் கலந்துகொண்டார். மேலும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏற்றுமதி பிரச்சினை குறித்து மத்திய அமைச்சருடன் தெரிவித்தனர்.
அக்னிபாத் திட்டத்துக்கு ஆதரவில்லையா..விமான துறையில் 3 நாட்களில் 57,000 இளைஞர்கள் விண்ணப்பம்.. !

திருப்பூர் ஏற்றுமதி
அதன் பின்னர் மத்திய அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் பேசியபோது பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் திருப்பூர் 30,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியை ஈட்டித் தந்துள்ளது என்றும், நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் திருப்பூர் ஏற்றுமதி துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும் கூறினார்.

2000 மடங்கு உயர்வு
திருப்பூரில் ஏற்றுமதி மதிப்பு தற்போது 30 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது என்றும் கடந்த 35 ஆண்டுகளில் 2000 மடங்கு ஏற்றுமதி உயர்ந்துள்ளது என்றும் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்கு திருப்பூர் மிகப்பெரிய அளவில் உதவி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

திருப்பூர் மாடல்
மேலும் திருப்பூர் வளர்ச்சியை உலகின் எந்த ஒரு நகரத்துடன் ஒப்பிட முடியாது என்றும் திருப்பூரை போன்று இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களையும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மற்ற நகரங்களில் திருப்பூர் மாடல் பின்பற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

30 டிரில்லியன்
மேலும் இந்திய பொருளாதாரம் அடுத்த 20 ஆண்டுகளில் 30 டிரில்லியன் என்ற இலக்கை எட்டிப் பிடிக்கும் என்றும் இந்த இலக்கை எட்டிப் பிடிக்க முடியுமா என்று சந்தேகம் கொள்பவர்களுக்கு திருப்பூரை நாங்கள் உதாரணமாக காட்டுவோம் என்றும் அவர் தெரிவித்தார். திருப்பூர் மாடலை இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களும் கடைபிடித்தால் கண்டிப்பாக 30 ட்ரில்லியன் டாலர் இலக்கு என்பது சாத்தியமானதுதான் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் பேசினார்.

5 டிரில்லியன்
இந்த நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை 2025ஆம் ஆண்டு எட்டும் என கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்தார். ஆனால் 2022ஆம் ஆண்டில் 3 டிரில்லியன் மட்டுமே இந்திய பொருளாதாரம் எட்டி உள்ளது என்றும் பிரதமர் கூறியபடி 5 டிரில்லியன் டாலரை எட்டவே இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்து வருகின்றனர்.

30 டிரில்லியன் சாத்தியமா?
5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டவே 2027ஆம் ஆண்டு ஆகும் என்ற நிலையில் அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் கூறியபடி 30 ட்ரில்லியன் டாலர் என்ற இலக்கை இந்திய பொருளாதாரம் இன்னும் 27 ஆண்டுகளில் எட்டுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என தொழிலதிபர்கள் கருத்து கூறி வருகின்றனர்.