தமிழ்நாட்டில் சென்னை மட்டும் அல்லாமல் அனைத்து பகுதிகளும் தொழிற்துறையில் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகப் பல மாவட்டத்தில் சிப்காட், தொழிற்துறை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தென் தமிழகத்தில் அதிகப்படியான நிறுவனங்கள், முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்பு, தொழிற்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்த முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கொரிய நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக முக்கியக் கூட்டமும் சமீபத்தில் நடந்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

CII மதுரை
CII மதுரை அமைப்பு, கொரியக் குடியரசின் தூதரக ஜெனரல் Youngseup Kwon உடன் தென் தமிழகப் பகுதியில் இருக்கும் வர்த்தக வாய்ப்புகள் குறித்துக் கொரிய வர்த்தகத் தலைவர்களுடன் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் முதலீட்டுக்கான வாய்ப்பை கொரிய அதிகாரிகள் உடன் ஆலோசனை செய்யப்பட்டது.

தென் தமிழகம்
மேலும் தென் தமிழகப் பகுதியில் தொடர்ந்து தொழிற்சாலைகளை ஈர்த்து வரும் நிலையில் அதற்கான கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. உதாரணமாகத் தூத்துக்குடி - நாகை மத்தியில் 4 வழி சாலை திட்டம் செயல்படுத்தத் துவங்கியுள்ளது தேசிய நெடுஞ்சாலைத் துறை துவங்கியுள்ளது. இந்தத் திட்டம் மூலம் சுமார் 6 தென் மாவட்டங்கள் பலன் அடையும்.

தூத்துக்குடி - நாகப்பட்டினம்
சுமார் 315 கிலோமீட்டர் நீளம் கொண்ட தூத்துக்குடி - நாகை 4 வழி சாலை திட்டம் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் மாநிலங்களுக்குப் பலன் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2 வழி சாலையாக இருக்கும் வழித்தடம் 4 வழியாக மாற்றப்பட உள்ளது, விரைவில் இதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்படும். இத்திட்டத்தின் மதிப்பு 7000 கோடி ரூபாய்.

மதுரை திருநகர்
இதேபோல் மதுரை திருநகரில் Trade and convention center கட்டுமானத்தை ரூ. 100 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட உள்ளதாகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தெரிவித்துள்ளது. இத்திட்டம் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்தத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரம்பலூர்
சமீபத்தில் தான் தமிழ்நாடு அரசு பெரம்பலூரில் பிரமாண்ட காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் கோத்தாரி-பீனிக்ஸ் கார்ப்பரேஷன் அதன் தோல் அல்லாத காலணி ஆலையைப் பெரம்பலூரில் அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தக் கோத்தாரி-பீனிக்ஸ் கார்ப்பரேஷன் ஆலை 580 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுச் சுமார் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

தைவான் நிறுவனங்கள்
தென் கொரிய நிறுவனங்களை ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது போல் சில மாதங்களுக்கு முன்பு தைவான் நாட்டு நிறுவனங்களை ஈர்க்க முயற்சிகள் நடந்தது. இதன் விளைவாகத் தைவான் நாட்டில் இருந்து 10 நிறுவனங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 740 கோடி ரூபாய் முதலீட்டில் காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைக்கத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முதலீட்டு மூலம் சுமார் 4500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தமிழ்நாடு 2030
தமிழ்நாட்டை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற திட்டத்துடன் மாநிலத்தின் பல பகுதியில் வேலைவாய்ப்புகளையும், வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகச் சென்னைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் மாநிலத்தின் பல மாவட்டத்தில் சிப்காட், தொழிற்பூங்கா அமைப்பது மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் முயற்சிகள் அரசின் வாயிலாகவும், வர்த்தக அமைப்புகள் வாயிலாகவும் நடந்து வருகிறது.