ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு இந்தியா - ரஷ்யா மத்தியிலான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது, குறிப்பாகக் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும் வளர்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த நிலையில்தான் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் இந்தியாவைக் குறை கூறி வருகிறது. இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான ஜெய்சங்கர் தரமான பதிலை அளித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக இருக்கும் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது அதிகப்படியான தடையை விதித்தது, இதனால் ரஷ்யாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

தள்ளுபடி விலை
இந்த நிலையில் ரஷ்யா புதிய வர்த்தகத்தைப் பெறுவதற்காக இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளுக்குத் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் சப்ளை செய்யத் துவங்கியது. இதைப் பெரிய அளவில் பயன்படுத்திக் கொண்ட காரணத்தால் இந்தியா பொருளாதாரச் சரிவில் இருந்து தப்பித்துள்ளது.

இந்தியா மற்றும் ஜெர்மனி
சமீபத்தில் இந்தியா மற்றும் ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் டெல்லியில் சந்தித்துப் பேசினர். இப்போது ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் Annalena Baerbock இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியாகக் கச்சா எண்ணெய் வாங்கி வருவது குறித்து விமர்சனம் செய்யப்பட்டது.

Annalena Baerbock கேள்விக்குப் பதில்
இக்கூட்டத்திலேயே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான ஜெய்சங்கர், ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் Annalena Baerbock கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் புள்ளி விபரங்கள் உடன் தக்க முறையில் பதில் அளித்துள்ளார்.

ஜெய்சங்கர் பதில்
இதை ஏற்கனவே சில பொது மேடையில் வெளிநாட்டினர் கேட்கும் கேள்விக்குப் பதில் அளித்தாலும் ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் முன் பதில் அளித்துள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

எரிபொருள்
இந்தச் சந்திப்பில் ஜெய்சங்கர் பிப்ரவரி 24 முதல் நவம்பர் 17 வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் அடுத்த 10 நாடுகள் வாங்கிய எரிபொருளைக் காட்டிலும் அதிகமான எரிபொருளை ரஷ்யாவிடம் இருந்து வாங்கி வருகிறது. இது மட்டும் அல்லாமல் இந்தியாவைக் காட்டிலும் ஐரோப்பா இக்காலகட்டத்தில் 6 மடங்கு அதிகக் கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளது.

எரிவாயு
இதேபோல் எரிவாயு இறக்குமதியை கணக்கில் கொண்டால் ஐரோப்பா சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிவாயு-வை வாங்கியுள்ளது, இந்தியா இதுவரை ரஷ்யாவிடம் இருந்து எரிவாயுவை வாங்கவில்லை எனத் தரவுகளை அடுக்கினார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.

நிலக்கரி
இதோடு நிற்காமல் ஐரோப்பா, இந்தியாவை விடவும் 50 சதவீதம் அதிக நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது. இதை உலக நாடுகளின் அரசுகளும் சரி, மீடியா நிறுவனங்களும் சரி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

ஆயுதம்
மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ஆயுதங்களுக்குப் போதுமான சப்ளை இல்லாததால், பல தசாப்தங்களாக இந்தியா ரஷ்யாவின் ஆயுதங்களை வாங்கியதால் தற்போது ரஷ்ய ஆயுத இருப்பு அதிகரித்துள்ளது என்று அவர் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவின் கிரான்பெராவில் பேசிய போது அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

60 டாலர் விலை நிர்ணயம்
இந்த நிலையில் தான் உக்ரைன் ஆதரவு நாடுகளான ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 60 டாலர் என்ற விலையை நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் ரஷ்யாவின் வருவாய் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் ரஷ்யா இந்த முடிவுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.