இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா காலத்திலும் அன்னிய நேரடி முதலீடுகள் வளர்ச்சியானது நவம்பர் 2020ல் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டுள்ளது.
இது குறித்து வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நவம்பர் 2020 மாதத்தில் அன்னிய நேரடி முதலீடுகள் 81% வளர்ச்சி அதிகரித்து 10.15 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு நவம்பரில் 5.6 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. கிட்டதட்ட கடந்த நவம்பர் மாதத்தில் இரு மடங்கு அன்னிய முதலீடுகள் வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நவம்பரில் எவ்வளவு முதலீடு?
குறிப்பாக ஈக்விட்டியில் 8.5 பில்லியன் டாலராக முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதே முந்தைய ஆண்டில் 2.8 பில்லியன் டாலர்களாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது கிட்டதட்ட 70 சதவீத வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கடந்த மார்ச்சில் இருந்தே தொடங்கியது. எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் மட்டும் அபாரமாக அன்னிய நேரடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

எட்டு மாதங்களில் முதலீடு?
குறிப்பாக இந்த எட்டு மாத இடைவெளியில் 58.37 பில்லியன் டாலர்கள் ஈர்க்கப்பட்டுள்ளன. இது ஒரு நிதியாண்டில் முதல் எட்டு மாதங்களில் இந்தளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது அதிகமாகும். இது கடந்த 2019 -20ம் நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடும்போது 22 சதவீதம் இது அதிகமாகும். இது கடந்த 2019 - 20ம் நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் 47.67 பில்லியன் டாலர்கள் முதலீடுகளாக ஈர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈக்விட்டி சந்தையில் முதலீடு
இதே ஈக்விட்டியில் கடந்த 2020 - 21ம் நிதியாண்டில் ஏப்ரல் - முதல் நவம்பர் வரையிலான முதல் ஒன்பது மாதங்களில் 43.85 பில்லியன் டாலர் அன்னிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இது ஒரு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் மிக அதிகமான தொகையாகும். இது முந்தைய 2019- 20ம் நிதியாண்டின் எட்டு மாதங்களில் 32.11 பில்லியன் டாலர்களாகும். இது சுமார் 37% அதிகமாகும்.

வளர்ச்சி பாதையில் இந்தியா
அன்னிய முதலீடுகள் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் முக்கிய காரணி என்பதால், இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது என்பதற்கு இதுவே சிறந்த ஆதாரமாகும்.
இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைகள் மிக எளிதாக முதலீடு செய்யும் வகையில் இருப்பதே, இந்த வளர்ச்சிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இது நிச்சயம் இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு
நடப்பு ஆண்டில் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் பொருட்டும், தொழிற்துறைகளை மீட்டெடுக்கும் பொருட்டும் வரவிருக்கும் பட்ஜெட்டில் அன்னிய முதலீட்டு விதிகளில் மேலும் தளர்வுகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது நாடு மோசமான பொருளாதார சரிவினைக் கண்டுள்ள நிலையில், அதனை மீட்டெடுக்க பயன்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.